ஈரோடு அருகே நடுரோட்டில் ஹாயாக படுத்திருந்த சிறுத்தைப்புலி - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

வாகன ஓட்டிகள் அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்து சற்று தூரத்திலேயே வாகனங்களை நிறுத்திக்கொண்டனர்.
சிறுத்தை
Published on

தாளவாடி,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான சிறுத்தைப்புலிகள் காணப்படுகின்றன. சத்தியமங்க லம் வனப்பகுதி வழியாக திண்டுக்கல்-மைசூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இரவு நேரங்களில் சிறுத்தைப்புலிகள் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்து திம்பம் மலைப்பாதையில் சுற்றுகின்றன.

சிறுத்தைப்புலி

இதுபோல் வனவிலங்குகள் அடிக்கடி இரவு நேரங்களில் திம்பம் மலைப்பாதைக்கு வந்துவிடுவதால், அதன் பாதுகாப்பு கருதி திம்பம் மலைப்பாதையில் இரவு நேரங்களில் செல்ல கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் வாகனங்கள் மற்றும் காய்கறி ஏற்றி வரும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று அதிகாலை திம்பம் மலைப்பாதையில் நடுரோட்டில் சிறுத்தைப்புலி ஒன்று 'ஹாயாக’ படுத்திருந்தது. அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்து சற்று தூரத்திலேயே வாகனங்களை நிறுத்திக்கொண்டனர்.

வனத்துறை

சிலர் வாகனங்களில் இருந்தபடியே செல்போனில் வீடியோ எடுத்தனர். சுமார் 10 நிமிடம் படுத்திருந்த சிறுத்தைப்புலி பின்னர் காட்டுக்குள் ஓடிவிட்டது. இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. திம்பம் மலைப்பாதையில் சிறுத்தைப்புலி நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com