

சென்னை,
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
”பூந்தமல்லி அரசு உதவிபெறும் பள்ளியில், பல்லி விழுந்த காலை உணவைச் சாப்பிட்ட 17 பிஞ்சுக் குழந்தைகள் வாந்தி மற்றும் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. குழந்தைகளின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய தவெக அரசின் இந்த மெத்தனப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தவெக அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் பள்ளிகளில் 'ஆய்வு' என்ற பெயரில் செய்யும் போட்டோஷூட் அனைத்தும் வெறும் 'ரீல்' என்பதற்கு மாணவர் உணவில் கிடந்த பல்லியே சாட்சி. விளம்பர மோகத்தை விடுத்து, உணவு தயாரிக்கும் இடங்களில் போதிய சுகாதார ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் இத்தகைய விபரீதங்கள் நடந்திருக்காது.
எனவே, இந்தச் சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தரமான சிகிச்சை வழங்கப்படுவதை தவெக அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற விபரீதங்கள் நிகழாதவாறு, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் உணவின் தரத்தை சோதிக்கத் தனிக்குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என முதல்-அமைச்சரை வலியுறுத்துகிறேன்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.