

சென்னை,
செம்மண் முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2006 முதல் 2011-ம் ஆண்டு வரையில் நடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் உயர்கல்வி மற்றும் கனிம வளங்கள், சுரங்கத்துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் செம்மண் வெட்டி எடுத்ததன் மூலம், அரசுக்கு ரூ.28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரம் இழப்பு ஏற்படுத்தியதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் பொன்முடி, அவரது மகன் கவுதம் சிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கின் அடிப்படையில், மத்திய அமலாக்கத்துறை, பொன்முடி, கவுதம சிகாமணி உள்ளிட்டோருக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. அதில், செம்மண் முறைகேடு மூலம் கிடைத்த பெருந்தொகையை ஹவாலா பரிவர்த்தனை மூலம் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பொன்முடி உள்ளிட்டோர் மீதான இந்த செம்மண் முறைகேடு வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட கோர்ட்டு, அனைவரையும் விடுதலை செய்து, கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பு அளித்தது. இதையடுத்து பிரதான வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டு விட்டதால், அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் பிரதான வழக்கில் இருந்து குற்றம்சாட்டப்பட்ட பொன்முடி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டுள்ளதால், அமலாக்கத்துறை வழக்கை தொடர அனுமதிக்க முடியாது. எனவே, பிற வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள தீர்ப்புகளின் அடிப்படையில், பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கை ரத்து செய்கிறோம்" என்று உத்தரவிட்டுள்ளனர்.