நாகர்கோவில் பணிமனையில் பராமரிப்பு பணிகள்: எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்

கோப்புப்படம்
அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லையில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாகர்கோவில் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தாம்பரத்தில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-22657) நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) முதல் அடுத்த மாதம் 21-ந் தேதி வரை கன்னியாகுமரி வரை இயக்கப்படும். இந்த ரெயில் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும். அதே போல, நாகர்கோவிலில் இருந்து மாலை 5.5 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் ரெயில் (22658) வருகிற 23-ந் தேதி முதல் அடுத்த மாதம் 22-ந் தேதி வரை கன்னியாகுமரியில் இருந்து புறப்படும்.
பகுதி நேரமாக ரத்து
தாம்பரத்தில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12667) வருகிற 26-ந் தேதி முதல் அடுத்த மாதம் 17-ந் தேதி வரை கன்னியாகுமரி வரை இயக்கப்படுகிறது. அதே போல, நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு தாம்பரம் வரும் ரெயில் (12668) 27-ந் தேதி முதல் அடுத்த மாதம் 18-ந் தேதி வரை கன்னியாகுமரியில் இருந்து புறப்படும்.
சென்னை சென்டிரலில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12689) 27-ந் தேதி முதல் அடுத்த மாதம் 18-ந் தேதி வரை கன்னியாகுமரி வரை இயக்கப்படும். அதே போல, நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் ரெயில் (12690) 29-ந் தேதி முதல் அடுத்த மாதம் 20-ந் தேதி வரை கன்னியாகுமரியில் இருந்து இயக்கப்படும்.
அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில்
தாம்பரத்தில் இருந்து இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் (20691) நாளை மறுநாள் முதல் ஜூலை 21-ந் தேதி வரை நெல்லை வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரெயில் நெல்லை-நாகர்கோவில் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதே போல, நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு தாம்பரம் வரும் ரெயில் (20692) 23-ந் தேதியில் இருந்து அடுத்த மாதம் 22-ந் தேதி வரை நெல்லையில் இருந்து புறப்படும். இந்த ரெயில் நாகர்கோவில்-நெல்லை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.