திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை.. சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
நாகர்கோவில்,
செண்பகராமன்புதூர் சமத்துவபுரம் கங்கை தெருவை சேர்ந்தவர் மகேஷ் என்ற மகேஷ்வரன் (வயது 20), தொழிலாளி. இவருக்கும், சுசீந்திரம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
சிறுமியின் வீட்டு பகுதியில் மகேசின் உறவினர் வீடு உள்ளது. அங்கு வரும்போது சிறுமியுடன் பழகி வந்தார். சிறுமி பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். அவ்வப்போது சிறுமியை சந்தித்து வந்த மகேஷ் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறினார்.
இந்த நிலையில் கடந்த 13-1-2020 அன்று பக்கத்து கடைக்கு இனிப்பு வாங்க சென்ற சிறுமியை, மகேஷ் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்துக்கு கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டார். பின்னர் அங்கேயே வாடகைக்கு வீடு எடுத்து சிறுமியை பலாத்காரம் செய்தார்.
இதனால், அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் சம்பவம் குறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேசை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை நாகர்கோவில் போக்சோ கோர்ட்டில் நடந்தது. வழக்கு பற்றி நீதிபதி சுந்தரையா விசாரணை நடத்தினார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
அப்போது குற்றம் சாட்டப்பட்ட மகேசுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி சுந்தரையா தீர்ப்பு வழங்கினார். அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.






