

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன
பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
இதனிடையே, சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், தேமுதிக, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, மக்கள் நீதி மய்யம், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், எஸ்டிபிஐ, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அதேவேளை, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அந்த வகையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனித நேய மக்கள் கட்சியுடன் திமுக இன்று பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் திமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கி அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாகவும், 2 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவோம் என்றும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். அதேவேளை, மனித நேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 2 தொகுதிகள் எவை என்ற அறிவிப்பு வெளியாகவில்லை.
கடந்த 2021 தேர்தலிலும் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த மனிதநேய மக்கள் கட்சிக்கு கடந்த முறையும் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
பாபநாசம், மணப்பாறை ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் அந்த 2 தொகுதிகளிலும் மனிதநேய மக்கள் கட்சி வெற்றிபெற்றது. கடந்த தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட நிலையில் வரும் தேர்தலிலும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.