எக்ஸ்பிரஸ் ரெயிலில் அழுகிய நிலையில் ஆண் பிணம்: 4 நாட்களாக பெட்டியிலேயே கிடந்த அவலம்

சென்னை சென்டிரலில் இருந்து 100-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வடமாநிலங்களுக்கு இயக்கப்படுகின்றன.
எக்ஸ்பிரஸ் ரெயிலில் அழுகிய நிலையில் ஆண் பிணம்: 4 நாட்களாக பெட்டியிலேயே கிடந்த அவலம்
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் அதிகமான பயணிகள் வந்து செல்லும் ரெயில் நிலையங்களில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இங்கிருந்து 100-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வடமாநிலங்களுக்கு இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து சென்னை சென்டிரலுக்கு கடந்த 15-ந் தேதி கங்கா-காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்துள்ளது. பயணிகளை இறக்கிவிட்டு, அந்த ரெயில் அத்திப்பட்டில் உள்ள ரெயில்வே பணிமனைக்கு சென்றது. 3 நாட்களாக பணிமனையிலேயே ரெயில் நின்றிருந்தது.

பின்னர், பராமரிப்பு பணிக்காக நேற்று முன்தினம் இரவு பேசின்பிரிட்ஜ் பணிமனைக்கு கங்கா-காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் கொண்டுவரப்பட்டது. ஊழியர்கள் ரெயில் பெட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஊழியர்கள் ஒவ்வொரு பெட்டியாக சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, முன்பதிவு செய்யப்படாத ஒரு பெட்டியில் இருந்து அதிகளவில் துர்நாற்றம் வீசியது.

சந்தேகம் அடைந்த ரெயில்வே ஊழியர்கள் ரெயில் பெட்டியின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, அழுகிய நிலையில் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஒரு ஆண் சடலம் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், ரெயில்வே ஊழியர்கள் சென்னை சென்டிரல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை கைப்பற்றி ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து சென்டிரல் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com