வரலாறு எழுத பலர் வருவார்கள்; வரலாற்றையே மாற்ற சிலரே வருவார்கள் - சி.விஜயபாஸ்கர்

முதல்-அமைச்சர் விஜய் 2 மணி நேரம் எங்களுக்காக செலவிட்டார் என சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
வரலாறு எழுத பலர் வருவார்கள்; வரலாற்றையே மாற்ற சிலரே வருவார்கள் - சி.விஜயபாஸ்கர்
Published on

சென்னை,

டாக்டர் சி.விஜயபாஸ்கர்

த.வெ.க.வில், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் மாற்றுக்கட்சியினர் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த சனிக்கிழமையும் மாற்றுக்கட்சிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் த.வெ.க.வில் இணைந்தனர். இதற்கான நிகழ்ச்சி பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது.

முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு 2-வது முறையாக விஜய் கட்சி அலுவலகம் வந்தார். அவரை நிர்வாகிகள் வரவேற்றனர். அவரது வருகையை எதிர்பார்த்து, சமீபத்தில் எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க.வில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜய பாஸ்கர், இசக்கி சுப்பையா மற்றும் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் காத்திருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விஜய் பேசினார். தொடர்ந்து அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

2 மணி நேரம்...

முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்த பிறகு டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறும்போது, 'இனி அனைத்து தேர்தல்களிலும் த.வெ.க. வெற்றி பெறும். எங்கள் அனைவரையும் தனித்தனியாக அவர் சந்தித்து கருத்து கேட்டார். 2 மணி நேரம் எங்களுக்காக செலவிட்டார்' என்றார்.

இந்த நிலையில், முதலமைச்சர் விஜய்யை சந்தித்த புகைப்படத்தை டாக்டர் சி.விஜயபாஸ்கர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில்,

“வரலாறு எழுத பலர் வருவார்கள்…வரலாற்றையே மாற்ற சிலரே வருவார்கள். தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை மாற்றத்தின் ஆட்சியாக மலரச் செய்து, புதிய அரசியல் வரலாற்றை படைத்து வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும்; முதல்-அமைச்சருமான விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற நெஞ்சம் நிறைந்த தருணம். வெற்றித் தலைவர் பாதையில்… மக்களுக்கான பயணம்…அதே உறுதியோடு தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com