திருவண்ணாமலை கோவிலில் அபிஷேகம் பார்க்கும் பக்தர்களுக்கு கட்டாயமாகிறது மருத்துவ பரிசோதனை..!

ஒரு மணி நேரத்திற்கு முன்பு கோவிலுக்குள் வந்து கோவிலில் உள்ள மருத்துவ முகாமில் பக்தர்கள் உடற்தகுதி பரிசோதனை செய்து கொள்ளலாம்.
திருவண்ணாமலை கோவிலில்  அபிஷேகம் பார்க்கும் பக்தர்களுக்கு கட்டாயமாகிறது மருத்துவ பரிசோதனை..!
Published on: 

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கருவறையில் நடைபெறும் மூலவர் அபிஷேகத்தில் பங்கேற்கும் பக்தர்கள் மருத்துவ பரிசோ தனை செய்துக்கொள்ளலாம் என கோவில் இணை ஆணையர் பரணிதரன் தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வருகிற நவம்பர் மாதம் 15-ந் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். 10-வது நாள் விழாவான 24-ந் தேதி அதிகாலையில் கோவிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு கோவில் பின்புறம் அமைந்துள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

இந்த நிலையில், நேற்று கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் பணியாளர்களுடனான ஆலோசனை கூட்டம் கோவில் உள்துறை அலுவலகத்தில் நடைபெற்றது. உதவி ஆணையர் பாலசுப்பிரமணி, மேலாளர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பரணி தீபம், மகா தீபம்

கூட்டத்திற்கு கோவில் இணை ஆணையர் பரணிதரன் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறும் நாட்களில் சாமி உற்சவத்திற்கு சிறப்பான அலங்காரம் செய்யப்பட்டு குறித்த நேரத்தில் சாமி புறப்பாடு நடைபெற வேண்டும். கோவிலில் பூ அலங்காரங்கள் சிறப்பான முறையில் இருக்க வேண்டும்.

கூட்டம் அதிகம் உள்ள நாட்களில் அதற்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்து சாமி புறப்பாடு குறித்த நேரத்தில் நடைபெற வேண்டும். பஞ்ச மூர்த்திகளின் தேரோட்டம் குறித்த நேரத்தில் புறப்பட்டு விரைந்து மாட வீதிகளில் உலா வர அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

பரணி தீபம் மற்றும் மகா தீபம் நிகழ்ச்சியின் போது கோவில் பணியாளர்களுடன் சிவாச்சாரியார்களும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மருத்துவ பரிசோதனை

தொடர்ந்து அவர் பேசியதாவது:-

கடந்த சில நாட்களாக சாமி மற்றும் அம்மன் சன்னதிகளில் மூலவர் அபிஷேகத்தை காண்பதற்காக பக்தர்கள் 'ஆன்லைன்' மூலமாகவும், 'ஆப் லைன்' மூலமாகவும் பதிவு செய்து கருவறைக்குள் சென்று அபிஷேகத்தை பார்க்கிறார்கள். அப்போது சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவது போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது.

இதனை தடுக்கும் வகையில் வரும் வாரங்களில் இருந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூலவர் அபிஷேகத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. வழக்கம்போல் சாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் நடைபெறும். ஆன்லைன் புக்கிங் கிடையாது.

மற்ற நாட்களில் அபிஷேகத்திற்கு முன்பதிவு செய்து வரும் பக்தர்கள் விருப்பம் இருந்தால் ஒரு மணி நேரத்திற்கு முன்பு கோவிலுக்குள் வந்து கோவிலில் உள்ள மருத்துவ முகாமில் உடற்தகுதி பரிசோதனை செய்து கொள்ளலாம்.

இன்று முதல் அமல்

இந்த நடைமுறை இன்று (புதன்கிழமை) முதல் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் கருவறையில் அமர்ந்து சாமி, அம்மன் அபிஷேகத்தை காணக்கூடிய பக்தர்களுக்கு ஓ.ஆர்.எஸ். கரைசல் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வயது முதிர்ந்தவர்களை அபிஷேகத்தில் கடைசியாக தான் அமர வைக்க வேண்டும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள், விடுமுறை நாட்கள், பண்டிகை காலங்களில் பக்தர்கள் விரைந்து சாமி தரிசனம் செய்ய கோவில் பணியாளர்களுடன் சிவாச்சாரியார்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com