மேகதாது அணை விவகாரம்; ஜூன் 2ம் தேதி கர்நாடக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் - வைகோ அறிவிப்பு

மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக வைகோ தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை விவகாரம்;  ஜூன் 2ம் தேதி கர்நாடக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் - வைகோ அறிவிப்பு
Published on

சென்னை,

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

காவிரி நதியின் குறுக்கே மேகதாட்டு எனும் இடத்தில் கர்நாடக அரசு அணை கட்ட திட்டமிட்டு 5,900 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து, அணை கட்டுவதற்கான பொருட்களை ஆயத்தப்படுத்தி வருகிறது.

அப்படி அணை கட்டப்பட்டு, 68 டி.எம்.சி. தண்ணீர் அதில் தேக்கப்பட்டால், காவிரி மேலாண்மை ஆணையமும், உச்சநீதிமன்றமும் வழங்கிய தீர்ப்புகளுக்கு விரோதமாக அது அமையும். ஏற்கனவே 15 லட்சம் ஹெக்டேர் ஏக்கர் பாசனத்தை தமிழ்நாடு இழந்து நிற்கும் நிலையில், மேட்டூர் அணைக்கே தண்ணீர் வராமல், கொள்ளிடமும், கல்லணையும் வறண்டு, தஞ்சை மாவட்டம் உள்ளிட்ட சோழ மண்டலமாம் டெல்டா மாவட்டங்கள் பட்டினிப் பிரதேசமாகும்.

மேகதாட்டுவில் அணை கட்ட 2014 டிசம்பர் 7, 8 தேதிகளிலேய அன்றைய மத்திய அமைச்சர் அனந்தகுமார் இல்லத்தில் கர்நாடகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பி.க்களும், மத்திய அமைச்சர்களும் கலந்துகொண்டு சதி ஆலோசனை செய்து மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு மறைமுகமாக மத்திய அரசு ஏற்பாடு செய்து கொடுத்த செய்தி ஆங்கில நாளேட்டில் விரிவாக வெளியிடப்பட்டது.

அதை அறிந்து, காவிரி பாதுகாப்பு இயக்கத்தை அமைத்து, 212 விவசாய அமைப்புக்கள் பங்கேற்ற கூட்டத்தை தஞ்சையில் நடத்தி, சோழ மண்டலம் முழுக்க ஊர் ஊராகச் சென்று மேகதாட்டு அணையால் வரும் ஆபத்தை தஞ்சை மண்டல விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் வரப்போகிற அபாயத்தை எடுத்துக் கூறிய கடமையை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் செய்தது.

தற்போது கர்நாடக மாநில துணை முதல்-அமைச்சர் சிவக்குமார் மேகதாட்டு அணையைக் கட்டியே தீருவோம் என்று ஆணவத்தோடு அறிவித்திருப்பதால், கர்நாடக அரசைக் கண்டித்தும், மேகதாட்டு அணையைக் கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும் வருகிற 2026 ஜூன் 02 ஆம் நாள் செவ்வாய்க் கிழமை அன்று காலை 10 மணி அளவில் மறுமலர்ச்சி திராவிட முன்றேறக் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயகக் கட்சி, சோசியல் டெமாக்ரடிக் கட்சி, மே 17 இயக்கம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழ்ப் புலிகள் கட்சி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, தற்சார்பு விவசாயிகள் சங்கம் ஆகிய அமைப்புக்கள் இணைந்து எனது தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே மாபெரும் அறப்போர் ஆர்பாட்டம் நடைபெறும்.

இந்த அறப்போர் ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயபெருமக்களும், வணிகளுர்களும், பொதுநல அமைப்பினரும் நல்லாதரவு தர வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com