

சென்னை,
மேகதாது அணை விவகாரத்தில் சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டு வந்த முதல்-அமைச்சருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
சட்டமன்றக் கூட்டத்தொடரில் காவேரி நதிநீர் பங்கீடு, மேகதாது அணை விவகாரத்தில் தனித்தீர்மானம் கொண்டுவந்தமைக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அதே நேரம் உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் காவேரி மேலாண்மை வாரியம் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை பெற முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும். கர்நாடக அரசுடன் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்த வேண்டாம். அது நமக்கு அவசியமும் இல்லை.
இன்றைய சட்டமன்றக் கூட்டத்தொடரில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் காவேரி நதிநீர் மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் தனித்தீர்மானமாக கொண்டுவந்து பேசியது, காவிரி நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பை 2007-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி வழங்கியது. காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் 2018-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி தீர்ப்பளித்தது. இவற்றை மதிக்காமலும், சம்பந்தப்பட்ட படுகை மாநிலங்களின் கருத்தை கேட்காமலும், மத்திய அரசின் எந்த அனுமதியையும் பெறாமலும் கர்நாடக அரசு காவிரி குறுக்கே மேகதாதுவில் தன்னிச்சையாக அணை கட்ட முயற்சி மேற்கொள்கிறது. இதை எந்த வகையிலும் ஏற்க முடியாது.
கர்நாடக அரசின் இந்த செயலுக்கு இந்த சட்டசபை தனது கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறது.
கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்துக்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உட்பட எந்த அனுமதியும் தரக் கூடாது என்று மத்திய அரசை இந்த சபை வலியுறுத்துகிறது.
காவிரி பிரச்சினை தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களின் உணர்வுபூர்வ பிரச்சினை. எனவே, கர்நாடக அரசு மேகதாது அல்லது காவிரி படுகையில் வேறு எந்த இடத்திலும் அணை அல்லது புதிய நீர்த்தேக்க திட்டத்தை மேற்கொள்ளக்கூடாது. பிற படுகை மாநிலங்களின் இசைவு இன்றி, மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் மேற்கொள்ளக்கூடாது என கர்நாடக அரசை அறிவுறுத்துமாறு மத்திய அரசை இந்த சபை வலியுறுத்துகிறது.
கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, அதன்மீது நடவடிக்கை மேற்கொள்ளவோ அல்லது அதற்கு அனுமதி வழங்கவோ கூடாது என்று மத்திய நீர்வள குழுமத்தையும் இந்த சபை வலியுறுத்துகிறது.
கர்நாடக அரசின் இந்த முயற்சியை முறியடித்து, தமிழக விவசாயிகளின் நலனை பாதுகாக்க தமிழக அரசு எடுக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கும் இந்த சபை ஒருமனதாக ஆதரவு தெரிவிக்கிறது என தெரிவித்தார்.
இத்தீர்மானத்தை முன் மொழிந்தமைக்காக தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு தமிழக வாழ்வுரிமைக்கட்சி சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதே நேரம் காவேரி நதிநீர் பங்கீடு, மேகதாது அணை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் காவேரி மேலாண்மை வாரியம் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை பெற முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும். கர்நாடக அரசுடன் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்த வேண்டாம். அது நமக்கு அவசியமும் இல்லை என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.