45 அரசு உதவி வழக்கறிஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் நிர்மல்குமார்

5 பொருளாளர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகள் என‌ மொத்தம் 50 பேருக்கு ஆணைகளை வழங்கினார்.
45 அரசு உதவி வழக்கறிஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் நிர்மல்குமார்
Published on

சென்னை,

எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் 45 அரசு உதவி வழக்கறிஞர்களுக்கு (நிலை 2) பணியமர்வு ஆணை மற்றும் அரசு சட்டக்கல்லூரிகளில் 5 பொருளாளர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகள் என‌ மொத்தம் 50 பேருக்கு ஆணைகளை வழங்கினார். இது தொடர்பாக வெளியான செய்திக்குறிப்பில்,

50 பேருக்கு நியமன ஆணை

எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.சி.டி.ஆர். நிர்மல் குமார் இன்று (29.05.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 45 அரசு உதவி வழக்கறிஞர்களுக்கு (நிலை 2) பணியமர்வு ஆணை மற்றும் தமிழ்நாடு அரசு சட்டக்கல்லூரிகளில் 5 பொருளாளர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகள் என‌ மொத்தம் 50 பேருக்கு ஆணைகளை வழங்கினார்.

அரசு உதவி வழக்கறிஞர்கள்

குற்ற வழக்குத் தொடர்வுத் துறையில் உள்ள அரசு உதவி வழக்குரைஞர் நிலை-2 வழக்குரைஞர்கள், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்கள் மற்றும் பெருநகர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்களில் குற்ற வழக்குகளை நடத்துவர். அத்துடன் அவர்கள் மாற்றுப் பணியில் பல்வேறு அரசுத் துறைகளில் சட்ட ஆலோசகர்களாக பணிபுரிவர்.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த அரசு உதவி வழக்குரைஞர் நிலை-2ல் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, முதல் நிலை தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றிற்கு பின் அப்பணியிடத்திற்கு 45 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட 45 நபர்களுக்கு அரசு உதவி வழக்குரைஞர் நிலை-2 பணியிடத்திற்கான பணியமர்வு ஆணைகளை எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் வழங்கினார்.

பொருளாளர்களாக பதவி உயர்வு

மதுரை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் செங்கல்பட்டு ஆகிய அரசு சட்டக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடமிருந்து கல்விக் கட்டணம் மற்றும் இதரக் கட்டணங்கள் வசூலித்து அரசுக் கணக்கில் செலுத்துதல், அக்கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை / கடன் உதவித் தொகைகள் வழங்குதல், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, பொது வருங்கால வைப்பு நிதி முன்பணம், பண்டிகை முன்பணம் மற்றும் இதர சிற்றினச் செலவுப் பட்டிகள் ஆகியவற்றிற்கான தொகைகள் பெறுதல் உள்ளிட்ட பொறுப்புகளை பொருளாளர்கள் (BURSAR) மேற்கொள்கின்றனர்.

மேற்படி, மதுரை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் செங்கல்பட்டு ஆகிய அரசு சட்டக் கல்லூரிகளில் காலியாக உள்ள ஐந்து பொருளாளர் (BURSAR) பணியிடங்களை நிரப்புவதற்காக சட்டக் கல்வி இயக்ககம் மற்றும் அரசு சட்டக் கல்லூரிகளில் பணிபுரிகின்ற 5 கண்காணிப்பாளர் மற்றும் மேலாளர் ஆகியோருக்கு பதவி உயர்வு வழங்கி ஆணைகளையும் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதிகாரிகள்

இந்நிகழ்வில் உள்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் க.மணிவாசன், சட்டத்துறை அரசு செயலாளர் எஸ்.ஜார்ஜ் அலெக்சாண்டர், சட்டக்கல்வி இயக்குநர் முனைவர் கௌரி ரமேஷ், குற்ற வழக்கு தொடர்வு இயக்குநர் கீர்த்தி ராஜன் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com