எரிபொருள் தட்டுப்பாடு என அச்சம்: தமிழகம் முழுவதும் பெட்ரோல் பங்குகளில் குவிந்த வாகன ஓட்டிகள்

3 நாட்களுக்கு பெட்ரோல் கிடைக்காது எனும் வதந்தியால் பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் குவிந்தனர்.
எரிபொருள் தட்டுப்பாடு என அச்சம்: தமிழகம் முழுவதும் பெட்ரோல் பங்குகளில் குவிந்த வாகன ஓட்டிகள்
Published on

ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக கடந்த சில நாட்களாக கியாஸ் சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிலிண்டர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளதால் ஹோட்டல்களில் உணவு வகைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே பெட்ரோல், டீசலுக்கும் தட்டுப்பாடு வரக்கூடும் என்ற வதந்தி பரவியது. 3 நாட்களுக்கு பெட்ரோல் கிடைக்காது என சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது. இதனால் அச்சம் அடைந்த வாகன ஓட்டிகள் தங்களது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுடன் பெட்ரோல் பங்குகளுக்கு படையெடுத்தனர்.

சென்னை, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பெட்ரோல் பங்குகளில் நேற்று நள்ளிரவு வரை கூட்டம் அலைமோதியது. இன்று காலையிலும் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் நிரப்ப காத்திருந்தன. வழக்கமாக 100 ரூபாய், 200 ரூபாய்க்கு பெட்ரோல் போடுபவர்கள் கூட டேங்குகளை முழுவதுமாக நிரப்பிச் சென்றதை பார்க்க முடிந்தது.

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தால் முன்கூட்டியே பெட்ரோல், டீசல் வாங்கி வைத்துக் கொள்வதாக பொதுமக்கள் பலரும் தெரிவித்துள்ளனர். தினசரி வேலைகள், அலுவலகப் பயணம் மற்றும் அவசர தேவைகளுக்கு வாகனங்கள் அவசியமாக இருப்பதால் எந்தவித சிக்கலும் ஏற்படாமல் இருக்கவே இப்படி முன்கூட்டியே எரிபொருள் நிரப்பிக் கொள்கிறோம் என்று பொதுமக்கள் கூறினர். அதேவேளையில், போதுமான அளவு எண்ணெய் கையிருப்பு இருப்பதால் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்றும் மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com