

நீலகிரி,
முதுமலை புலிகள் காப்பகத்தில் 9 வயது சிறுத்தை இறந்து கிடந்தது. அதன் சாவுக்கு காரணம் என்ன? என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், புலிகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இதுதவிர வனப்பகுதியில் விலை உயர்ந்த மரங்களும் உள்ளதால், வனத்துறையினர் தினமும் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் முதுமலை, மசினகுடி வனப்பகுதியில் காட்டு யானைகள் தொடர்ச்சியாக உயிரிழந்து வருகின்றன. இதனால் வனத்துறையினர் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் முதுமலை தெப்பக்காடு சரக வட்டச்சாலை பகுதியில் வன பணியாளர்கள் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது மணல் சாலை கண்காணிப்பு கோபுரம் அருகில் 9 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதை பார்த்தனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் துணை இயக்குநர் கணேசன் உத்தரவின்படி, வனச்சரகர் சிவக்குமார் தலைமையிலான வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர். ஆனால், என்ன காரணத்துக்காக சிறுத்தை இறந்தது என தெரியவில்லை. பின்னர் கால்நடை மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய வழிகாட்டுதலின்படி இறந்த சிறுத்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. முக்கிய உடற்பாகங்கள் ஆய்வக பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, சிறுத்தையின் உடலில் காயங்கள் உள்ளது. இதனால் மற்ற விலங்குடன் மோதலில் ஈடுபட்டு உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இருப்பினும், ஆய்வக பரிசோதனை அறிக்கை வந்த பிறகு முழு விவரம் தெரியவரும் என்றனர். தொடர்ந்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.