தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என வாழ்ந்தவர் முத்துராமலிங்கத் தேவர் - தமிழக கவர்னர் பதிவு

நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் மூன்றில் ஒரு பங்கு தமிழர்கள் இடம்பெறக் காரணமானவர் இவர் என தமிழக கவர்னர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்
Published on: 

சென்னை,

விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது பிறந்தநாள் விழாவும், 64-வது குருபூஜையும் இன்று நடைபெற்று வருகிறது.

தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள்

இதனை முன்னிட்டு தமிழ்நாடு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது;-

" பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என வாழ்ந்தவர்.

நைஷ்டிக பிரம்மச்சாரி, சிறந்த பேச்சாளர், ஆன்மிகவாதி, வள்ளலார், ராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் விவேகானந்தரைப் பின்பற்றி வாழ்ந்தவர்.

தமிழிலக்கியத்தில் புலமை பெற்றவர். பிரசாரத்துக்கு செல்லாமலே வெற்றிகள் பெற்றவர். அனைத்து சாதியினரையும் தேர்தலில் வெற்றி பெற வைத்தவர். அரிசனங்கள் ஆலய நுழைவுப போராட்டத்தை வைத்தியநாதய்யர் முன்னெடுத்த போது துணையாக நின்றவர். குற்றப் பரம்பரைச் சட்டத்தை நீக்கப் போராடி வெற்றி பெற்றவர்.

சொத்துக்களை தானமாக எழுதி வைத்தவர்

நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் மூன்றில் ஒரு பங்கு தமிழர்கள் இடம்பெறக் காரணமானவர். அதில் பெண்களும் அடக்கம். சுபாஷ் போஸ்சின் நெருங்கிய தளபதி. எதிர்கால உலக அரசியல் எவ்வழியில் செல்லும் என்பதை அன்றே கணித்தவர்.

விடுதலைப் போராட்டத்தில் பல ஆண்டுகள் சிறையில் கழித்தவர். தொழிலாளர்களின் தோழன், தொழிற்சங்கத் தலைவராய் தொண்டாற்றியவர். மூன்று முறை பாராளுமன்ற உறுப்பினர், பலமுறை சட்டமன்ற உறுப்பினர். தான் பிறந்த அக்டோபர் 30 அன்றே உயிர் நீத்தார். அதனால் அவருக்கு குருபூஜை. தன்னுடைய சொத்துக்களை எல்லோருக்கும் தானமாக எழுதி வைத்தவர். தேச விரோதிகள், பிரிவினைவாதிகள், நாத்திகவாதிகள் போன்றோருக்கு சிம்மசொப்பனம்.

தேசியத்தையும் தெய்வீகத்தையும் காப்போம்

"தேசியவாதிக்கு தேசமே குறி, அரசியல்வாதிக்கு தேர்தலே குறி" "இன்று மாலைக்கு நீட்டுகிற கழுத்து, நாளை தூக்குக் கயிறுக்கும் தயாராக இருக்க வேண்டும்" "வீரமற்ற விவேகம் கோழைத்தனம் விவேகமற்ற‌ வீரம் முரட்டுத்தனம்"

என்றெல்லாம் முழங்கிய வழியிலே தேசியத்தையும் தெய்வீகத்தையும் காப்போம்!"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X