திருப்பரங்குன்றம் கங்கை தீர்த்தத்தில் செத்து மிதக்கும் மீன்களை கண்டு கொள்ளாத தவெக அரசு - நயினார் நாகேந்திரன் கண்டனம்

தவெக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கங்கை தீர்த்தக் குளத்தைப் போர்க்கால அடிப்படையில் தூர்வாரித் தூய்மைப்படுத்த வேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம்
நயினார் நாகேந்திரன்
Published on: 

சென்னை,

திருப்பரங்குன்றம் கங்கை தீர்த்தத்தில் செத்து மிதக்கும் மீன்களை கண்டு கொள்ளாத தவெக அரசு என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது :-

திருப்பரங்குன்றம் கங்கை தீர்த்தத்தில் செத்து மிதக்கும் மீன்கள் - கண்டுகொள்ளாத ஜோசப் விஜய் அவர்களின் தவெக அரசுக்குக் கண்டனம்!

அறுபடை வீடுகளில் முதற்படை வீடான வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்பரங்குன்றத்தில், பாரம்பரியமாக ஏற்றப்படும் தீபத்தை ஏற்றக்கூட அனுமதி மறுத்து பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்திய தவெக அரசு, தற்போது புனிதமான "கங்கை தீர்த்தக் குளம்" நச்சுக்குட்டையாக மாறுவதையும் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. புனிதம் போற்றப்பட வேண்டிய அத்தீர்த்தக் குளத்தில், தற்போது மீன்கள் மர்மமான முறையில் கூட்டம் கூட்டமாகச் செத்து மிதக்கும் அவலக் காட்சி அரங்கேறியுள்ளது.. திருப்பரங்குன்றத்தில் பாரம்பரியமாக ஏற்றப்படும் புனித தீபத்தையே ஏற்ற விடாமல் தடுக்கிறீர்கள் தற்போது மர்மமான முறையில் மீன்களும் செத்து மிதக்கிறது எனில், இந்த பின்னணியில் இருக்கும் உண்மையான காரணம் என்ன? ஏதேனும் சதி உள்ளதா?

தவெக விஜய் ந்தலைமையிலான தவெக விஜய் ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை முற்றிலும் வழிதவறிப் போயுள்ளது. உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத நிர்வாகக் குளறுபடிகள் ஏற்படுத்திய வடு ஆறுவதற்குள், தற்போது திருப்பரங்குன்றத்திலும் இந்த நிர்வாகச் சீர்கேடு வெளிப்பட்டுள்ளது. களத்தில் இறங்கி உருப்படியான பணிகளைச் செய்யாமல், கோவில் வளாகங்களில் வெறும் விளம்பரத்திற்காகவும் சமூக வலைதளங்களில் 'ஆய்வு ரீல்கள்' போடுவதற்காகவும் மட்டுமே வலம் வருகிறார் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உண்டியல் வசூலில் காட்டும் தீவிரத்தை, பாரம்பரியமிக்க கோயில்களையும் தீர்த்தக் குளங்களையும் பாதுகாப்பதில் தவெக அரசு காட்டத் தவறிவிட்டது.

எனவே, தவெக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கங்கை தீர்த்தக் குளத்தைப் போர்க்கால அடிப்படையில் தூர்வாரித் தூய்மைப்படுத்த வேண்டும். இந்துக்களின் வழிபாட்டு உரிமைகளையும் ஆன்மிகத் தலங்களையும் தொடர்ந்து அவமதிக்கும் தவெக அரசு, இக்குளத்தை உடனடியாகச் சீரமைக்கத் தவறினால், பக்தர்களையும் பொதுமக்களையும் திரட்டி பாஜக சார்பில் மாபெரும் கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என எச்சரிக்கிறேன்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com