உயிர்ப்பலிகள் நிகழும் முன் செவிலிமேடு பாலாற்றை சீரமைக்க வேண்டும் - தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

பாலத்திலேயே மரக்கன்றை நட்டுச் சாமானியர் ஒருவர் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது மிகுந்த வேதனைக்குரிய ஒன்றாகும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
நயினார் நாகேந்திரன்
Published on: 

சென்னை,

உயிர்ப்பலிகள் நிகழும் முன் செவிலிமேடு பாலாற்றை சீரமைக்க வேண்டும் என தவெக அரசுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது :-

உயிர்ப்பலிகள் நிகழும் முன் செவிலிமேடு பாலாற்றுப் பாலத்தைச் சீரமைத்திடுக!

காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பாலாற்றுப் பாலத்தில் உள்ள ஆபத்தான பள்ளங்களால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் விபத்துகளில் சிக்குவதைத் தடுக்கக் கோரி, பாலத்திலேயே மரக்கன்றை நட்டுச் சாமானியர் ஒருவர் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது மிகுந்த வேதனைக்குரிய ஒன்றாகும். கனரக வாகனங்கள் செல்லும்போது பாலம் ஆபத்தாக அதிர்வதாகவும் பலமுறை புகாரளித்தும், தவெக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காப்பது அப்பட்டமான நிர்வாக அலட்சியமாகும்.

ஒரு லாரி ஜல்லிக் கற்களைக் கொட்டி மிக எளிதாகத் தீர்க்கப்பட வேண்டிய ஒரு அடிப்படைப் பிரச்சினையைக்கூடக் கவனிக்கத் தவறியிருப்பதுதான் முதல் - அமைச்சர் விஜய்யின் நிர்வாக முறையா? 'மாற்றம்', 'புதிய அரசியல்' என்ற முழக்கங்களை முன்வைத்து ஆட்சிக்கு வந்த தவெக அரசு, பொதுமக்களின் அன்றாடப் போக்குவரத்துப் பாதுகாப்பைக் கூட உறுதிசெய்யத் தவறி, தனது நிர்வாகத் திறனின்மையை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.

உயிர்ப்பலிகள் நிகழும் முன், செவிலிமேடு பாலாற்றுப் பாலத்தின் பள்ளங்களை உடனடியாகப் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பதோடு, அதன் உறுதித்தன்மையையும் வல்லுநர் குழு மூலம் ஆய்வு செய்ய வேண்டும். மக்களின் உயிரோடு விளையாடாமல், இந்த நியாயமான கோரிக்கையை ஏற்று முதல் - அமைச்சர் விஜய் தலைமையிலான அரசு இனியாவது தாமதமின்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com