காவல்துறையில் புதிய வசதி அறிமுகம்: பொதுமக்கள் இனி இணையதளம் மூலம் புகார் அளித்து இ-சி.எஸ்.ஆர். பெறலாம்

இந்த வசதி தமிழ்நாடு காவல்துறை இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது.
காவல்துறையில் புதிய வசதி அறிமுகம்: பொதுமக்கள் இனி இணையதளம் மூலம் புகார் அளித்து இ-சி.எஸ்.ஆர். பெறலாம்
Published on: 

சென்னை,

இணையதளத்தில் மின்னணு சமூக சேவைப் பதிவேடு (Electronic Community Service Register e-CSR) வசதியை தமிழ்நாடு காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

மின்னணு சமூக சேவைப் பதிவேடு

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் /படைத்தலைவர் முனைவர் மகேஷ் குமார் அகர்வால் இ.கா.ப., இன்று (18.11.2026) காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக கூட்ட அரங்கத்தில், தமிழ்நாடு காவல்துறை இணையதளத்தில் மின்னணு சமூக சேவைப் பதிவேடு (Electronic Community Service Register - e-CSR) வசதியை காவல்துறை இயக்குநர், மாநில குற்ற ஆவணக் காப்பகம் சஞ்சய் மாத்தூர் இ.கா.ப., மற்றும் கூடுதல் காவல்துறை இயக்குநர், சட்டம் மற்றும் ஒழுங்கு தா. ச. அன்பு இ.கா.ப., ஆகியோர் முன்னிலையில் அறிமுகப்படுத்தினார்.

புதிய வசதி அறிமுகம்

தமிழ்நாடு காவல்துறை இணையதளத்தில் பொதுமக்கள் தங்களது புகார்களை இணையவழியில் பதிவு செய்யும் வசதி ஏற்கனவே உள்ளது. எனினும், சமூக சேவைப் பதிவேடு (Community Service Register - CSR) பெற விரும்பும் புகார்தாரர்கள், அதனைப் பெறுவதற்காக காவல் நிலையத்திற்கு நேரில் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

பொதுமக்களுக்கு ஏற்படும் இந்த சிரமத்தைத் தவிர்த்து, புகார் அளிக்கும் நடைமுறையை மேலும் எளிமையானதாகவும். வெளிப்படையானதாகவும். எளிதில் அணுகக்கூடியதாகவும். பொதுமக்களுக்கு உகந்ததாகவும் மாற்றும் நோக்கில், தமிழ்நாடு காவல்துறை இணையதளத்தில் மின்னணு சமூக சேவைப் பதிவேடு (Electronic Community Service Register e-CSR) வசதியை தமிழ்நாடு காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி தமிழ்நாடு காவல்துறை இணையதளத்தில் (https://www.police.tn.gov.in) வழங்கப்பட்டுள்ளது.

விசாரணை நடவடிக்கை

பொதுமக்கள் இனி எந்தவொரு காவல் நிலையத்திற்கும் நேரில் செல்ல வேண்டியதில்லை. தங்களது வீட்டிலிருந்தபடியே தமிழ்நாடு காவல்துறை இணையதளத்தில் உள்ள "Register Complaint / e-CSR" என்ற வசதியைத் தேர்வு செய்து e-CSR-ஐப் பதிவு செய்யலாம்.

புகார் பதிவு செய்யப்பட்டவுடன், அது தானாகவே e-CSR ஆகப் பதிவு செய்யப்பட்டு, புகார்தாரருக்குத் தனித்துவமான e-CSR எண் கொண்ட மின்னணு ஒப்புகை உடனடியாக குறுஞ்செய்தி (SMS) மூலம் அனுப்பப்படும். பின்னர், அந்த e-CSR சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டு, விசாரணை நடவடிக்கை தொடங்கப்படும். புகாரில் காவல் நிலையம் குறிப்பிடப்படவில்லை எனில், அந்தப் புகார் சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் Moderator-க்கு அனுப்பப்பட்டு, அவர் மூலம் விசாரணைக்காக உரிய காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

Citizen Portal

சரிபார்ப்பு மற்றும் மேல் நடவடிக்கைக்காக, புகார்தாரர் மூன்று நாட்களுக்குள் தேவையான ஆதார ஆவணங்களுடன் செல்ல வேண்டிய காவல் நிலையத்தின் பெயர் குறித்த தகவல், மற்றொரு குறுஞ்செய்தி (SMS) மூலம் அவருக்குத் தெரிவிக்கப்படும். விசாரணைக்குப் பின்னர், சம்பந்தப்பட்ட காவல் நிலையம் உரிய சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும். அதாவது. வழக்கமான CSR பதிவு செய்வது /முதற்கட்ட விசாரணை நடத்துவது / முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்வது அல்லது உரிய காரணங்களுடன் புகாரை முடித்து வைப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நடவடிக்கையின் முடிவு. தமிழ்நாடு காவல்துறை இணையதளத்தின் Citizen Portal பகுதியில் பிரதிபலிக்கும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான புகார்கள் முன்னுரிமை அடிப்படையில் கையாளப்படும்.

நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு

"e-CSR வசதியின் நோக்கம். ஒவ்வொரு குடிமகனும் காவல்துறையை எளிதில் அணுகுவதற்கு வழிவகுப்பதுடன். பெறப்படும் ஒவ்வொரு புகாரும் முறையாகப் பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் உரிய முடிவுக்குக் கொண்டு வரப்படுவதை உறுதி செய்வதாகும். e-CSR-களின் செயல்பாடுகள் மற்றும் அவற்றின் மீதான நடவடிக்கைகள் பிரத்யேகக் கண்காணிப்பு Dashboard மூலம் உயர் அதிகாரிகளால் தொடர்ந்து கண்காணிக்கப்படும்."

முக்கிய அறிவிப்பு: e-CSR வசதி அவசரகாலச் சூழ்நிலைகளுக்கானது அல்ல.

அவசரகாலத்தில் பொதுமக்கள் உடனடியாக 100 / 112 என்ற தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ள வேண்டும். அவசரநிலையில் உள்ள பெண்கள். சிங்கப்பெண் உதவி எண் (Women Helpline) 1091 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X