கட்டட அனுமதி பெற புதிய இணையதள மேல்முறையீட்டு முறை அமல்: தமிழக அரசு தகவல்

தமிழக அரசின் புதிய இணையதள மேல்முறையீடு முறையானது மின்னணு முறையில் மேல்முறையீடு விண்ணப்பங்கள் தாக்கல் செய்தல், மேல்முறையீட்டு ஆணைகளை வெளியிடுதல் ஆகியவற்றின் மூலம் முழுமையான இணையவழிச் செயல்பாட்டிற்கு வழிவகுக்கும்.
தமிழக அரசு தகவல்.
Published on: 

சென்னை,

ஒற்றைச்சாளர இணையதள வாயிலாக கட்டட அனுமதி மற்றும் மனைப்பிரிவு ஒப்புதலுக்கான புதிய இணையதள மேல்முறையீட்டு விண்ணப்ப முறையை அமல்படுத்தி உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் நகர் ஊரமைப்பு ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

ஒற்றைச்சாளர இணையதளம் வழியாக கட்டட மற்றும் மனைப்பிரிவு அனுமதி விண்ணப்பங்கள் தொடர்பான மேல்முறையீடுகளைத் தாக்கல் செய்யவும், செயலாக்குவதற்கும், கண்காணிக்கவும் ஒருங்கிணைந்த புதிய இணையவழி திட்டத்தை தமிழக அரசு செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.

தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டம் 1971

தற்போது தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டம் 1971, பிரிவு 79-ன் கீழ், உரிய அதிகார அமைப்புகள் வழங்கும் ஆணைகள் மற்றும் முடிவுகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வழிவகை இருந்தாலும், அத்தகைய மேல்முறையீடுகளைச் சமர்ப்பிப்பதற்கும் செயல்படுத்துவதற்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக விண்ணப்பிக்கும் முறைகளையே பின்பற்ற வேண்டியுள்ளது. மேலும், மேல்முறையீடுகளைத் தாக்கல் செய்யவும், கண்காணிக்கவும், தீர்வு காணவும் ஒருங்கிணைந்த இணையதள வசதியோ அல்லது மேல்முறையீட்டு முடிவுகள் தொடர்பான விவரங்களைப் பொதுவெளியில், வெளியிடுவதற்கான வசதி இல்லை.

கட்டட அனுமதி பெற புதிய இணையதள மேல்முறையீட்டு முறை அமல்

இதற்குத் தீர்வாக, ஒற்றைச்சாளர இணையதள வாயிலாக கட்டட அனுமதி மற்றும் மனைப்பிரிவு ஒப்புதலுக்கான புதிய இணையதள மேல்முறையீட்டு விண்ணப்ப முறை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

மாநிலம் முழுவதும் மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி முடிவுகளுக்கு எதிரான மேல்முறையீடுகள் வெளிப்படையான மற்றும் எளிமையான முறையில் செயலாக்கப்படுவதையும், கண்காணிக்கப்படுவதையும், தீர்க்கப்படுவதையும் உறுதி செய்ய இச்செயலி ஒற்றைச்சாளர இணையதளத்துடன் ஒருங்கிணைக்கப்படும்.

இந்த இணையதள மேல்முறையீடு முறைமையானது, மின்னணு முறையில் மேல்முறையீடு விண்ணப்பங்கள் தாக்கல் செய்தல், அசல் விண்ணப்பத்துடன் தானியங்கி இணைப்பு, நிகழ்நேரக் கண்காணிப்பு, மின்னணுத் தொடர்பு, தணிக்கைப் பதிவேடுகளைப் பராமரித்தல், மேல்முறையீட்டு ஆணைகளை வழங்குதல் மற்றும் வெளியிடுதல் ஆகியவற்றின் மூலம் முழுமையான இணையவழிச் செயல்பாட்டிற்கு வழிவகுக்கும். இந்த நடைமுறை 27.10.2026 முதல் செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X