

சென்னை,
புதிய அரசுகள் பொறுப்பேற்கும்போது, முந்தைய அரசுகளின் திட்டங்களின் பெயர்களை மாற்றுவதும் அல்லது தங்களது கொள்கை அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையில் புதிய பெயர்களை சூட்டி பட்ஜெட்டில் அறிவிப்பதும் தமிழக அரசியலில் தொடர்ச்சியாக நடந்துவரும் ஒரு மரபாகவே பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் பொதுமக்களுக்கு மலிவு விலையில் உணவு வழங்கும் திட்டம், உகந்த விலையில் மருந்தகங்கள், குடிநீர் மற்றும் சிமெண்டு, உப்பு வழங்கும் திட்டங்களுக்கு எல்லாம் 'அம்மா' என்ற பெயர் வைக்கப்பட்டன.
எடுத்துக்காட்டாக அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா சிமெண்டு என்ற பெயரில் திட்டங்கள் உலா வந்தன. இதில் தற்போது அம்மா உணவகம் திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது.
அதேபோல், தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 'கலைஞர்' என்ற பெயரில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதாவது, கலைஞர் கைவினைத் திட்டம், கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், கலைஞர் தலை மரக்கன்றுக்கள் நடும் திட்டம், கலைஞர் காப்பீட்டுத் திட்டம் போன்றவையெல்லாம் மக்கள் திட்டங்களாக அரசால் அறிவிக்கப்பட்டன.
அந்த வரிசையில் தற்போது புதிதாக பொறுப்பேற்று இருக்கும் த.வெ.க. அரசும், அதுபோல ஒரு பெயரை முன்னிலைப்படுத்தி அரசு திட்டங்களில் முத்திரை பதிக்கத் தொடங்கியிருக்கிறது. அதன்படி, கடந்த 5 மற்றும் 6-ந்தேதிகளில் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பொது மற்றும் வேளாண்மை பட்ஜெட்டுகளில் "வெற்றி” என்ற பெயரில் மட்டும் 9 திட்டங்களை அறிவித்து இருக்கின்றன.
* வெற்றி மடிக்கணினி திட்டம்
* வெற்றி திறன் பயிற்சித் திட்டம்
* வெற்றி தொழில் முனைவோர் திட்டம்
* வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டம்
* வெற்றி வீடு திட்டம்
* வெற்றி 150
* வெற்றி விவசாயி விருது
* வெற்றி இல்லத்தரசி வீட்டுத்தோட்டம்
* வெற்றி வான்மகள் திட்டம்
இது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டவை ஆகும். இனிவரும் நாட்களில் அரசு அறிவிக்கும் புதிய திட்டங்களிலும் இந்த பெயர் பிரதிபலிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவே சொல்லப்படுகிறது.