தர்பூசணியில் எந்த ரசாயனமும் செலுத்தப்படவில்லை - ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்

தர்பூசணி பழங்களை ஆய்வு செய்ததில் எந்த ரசாயனமும் செலுத்தப்படவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

தர்பூசணி பழங்களுடைய நிறத்திற்கும், சுவைக்கும் ஊசி மூலமாக ரசாயனம் செலுத்தப்படுவதாக கூறிய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் செங்கல்பட்டு விவசாய நல சங்கத்தின் தலைவர் வெங்கடேசன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் அவர், "அதிகாரியின் தவறான பிரசாரம் காரணமாக தர்பூசணி விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, தவறான தகவலை பரப்பிய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் மற்றும் பிற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விவசாயிகள் உற்பத்தி செய்யக்கூடிய தர்பூசணி பழங்களை அரசே கொள்முதல் செய்து, அதற்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்க உத்தரவிட வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், "தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தர்பூசணி பழங்களை ஆய்வு செய்ததில் எந்த ஒரு ரசாயனமும் செலுத்தப்படவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது" என்று விளக்கம் அளித்தார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுதாரர் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிக்கும்படி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமாருக்கு உத்தரவிட்டு, இந்த வழக்கின் விசாரணையை ஜூன் 9-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com