மோடிக்கு இணையாக இன்னொரு பிரதமரை யாரும் சிந்தித்துக் கூட பார்க்க முடியாது - தமிழிசை சவுந்தரராஜன்

தென் மாநிலங்கள், வட மாநிலங்கள் என பிரதமர் மோடி எந்தவித பாகுபாடும் காட்டுவதில்லை.
மோடிக்கு இணையாக இன்னொரு பிரதமரை யாரும் சிந்தித்துக் கூட பார்க்க முடியாது - தமிழிசை சவுந்தரராஜன்
Published on

சென்னை,

தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார், அப்போது அவர் பேசியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் விஜய்க்கு மக்கள் தற்போது மிகப்பெரிய வாய்ப்பை வழங்கியுள்ளதாகவும், அந்த வாய்ப்பை அவர் தலைமையிலான அரசும், அவரது கட்சியும் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பிரதமர் நரேந்திர மோடிக்கு இணையாக நாட்டின் பிரதமர் பதவிக்கு வேறு ஒருவரை தற்போது யாராலும் சிந்தித்துக்கூட பார்க்க முடியாது என அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

நீண்ட அரசியல் அனுபவம்

நரேந்திர மோடி தொடர்ந்து மூன்று முறை நாட்டின் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டதுடன், அதற்கு முன்பு 12 ஆண்டுகள் மாநில முதல்-மந்திரியாகவும் பணியாற்றியவர். இதன் மூலம் 25 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட அரசியல் அனுபவத்தை அவர் பெற்றுள்ளார். எனவே, அவரது அரசியல் அனுபவத்துக்கு இணையாக வேறு யாரையும் ஒப்பிட முடியாது.

எளிதான விஷயம் அல்ல...

ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கவும், எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கவும் உரிமை உள்ளது. இருப்பினும், பிரதமர் மோடிக்கு இணையாக செயல்படுவது கூட எளிதான விஷயம் அல்ல என்றும் அவர் கூறினார். தென் மாநிலங்கள், வட மாநிலங்கள் என பிரதமர் மோடி எந்தவித பாகுபாடும் காட்டுவதில்லை என்றும், குறிப்பாக தென் மாநிலங்களின் வளர்ச்சியில் அவர் அதிக அக்கறை செலுத்தி வருகிறார்.

ஆரோக்கியமான விவாதங்கள்

தமிழர்களின் பெருமையான திருக்குறளை உலக அளவில் பிரதமர் மோடி எடுத்துச் சென்ற அளவுக்கு வேறு யாரும் செயல்பட்டதாகக் கூற முடியாது. மேலும், சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமான மற்றும் ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெற வேண்டும். சட்டப்பேரவை சண்டை மன்றமாக மாறக்கூடாது.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com