செவிலியர்கள் சமூகத்தின் மிக முக்கியமான தூண்கள்: தூத்துக்குடி கலெக்டர் புகழாரம்

உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடியில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக பணியாற்றிய மூத்த செவிலியர்களுக்கு மாவட்ட கலெக்டர் விஷு மகாஜன் கேடயம் வழங்கி பாராட்டினார்.
செவிலியர்கள் சமூகத்தின் மிக முக்கியமான தூண்கள்: தூத்துக்குடி கலெக்டர் புகழாரம்
Published on

தூத்துக்குடி,

'கைவிளக்கேந்திய காரிகை' என்று உலகத்தாரால் அன்போடு அழைக்கப்படும் புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மே 12-ம் தேதி உலக செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி அரசு செவிலியர் கல்லூரியில் சிறப்பு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய மாவட்ட கலெக்டர் விஷு மகாஜன், மருத்துவத் துறையில் செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தன்னலமற்ற சேவையைப் போற்றிப் பேசினார். நோயாளிகளின் நலனுக்காக இரவு பகலாகப் பாடுபடும் செவிலியர்கள், சமூகத்தின் மிக முக்கியமான தூண்கள் என்று அவர் புகழாரம் சூட்டினார்.

செவிலியர் துறையில் 25 ஆண்டுகளைக் கடந்து, எந்த விதத் தொய்வுமின்றி மிகச் சிறப்பாகப் பணியாற்றி வரும் மூத்த செவிலியர்களுக்கு, அவர்களது சேவையைப் பாராட்டி மாவட்ட கலெக்டர் கவுரவக் கேடயங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அதிகாரிகள், செவிலியர் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஏராளமான செவிலிய மாணவிகள் கலந்துகொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com