

சென்னை,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் நடத்திய உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை செயலாளர் அளித்த உறுதியை தொடர்ந்து, போராட்டத்தை ஒத்திவைக்க செவிலியர் சங்க நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு இடைநிலை சுகாதார பணியாளர்கள் சங்கத்தினர், பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நர்சுகள் கலந்து கொண்டனர்.
செவிலியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளருடன் செவிலியர் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, செவிலியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
சுகாதாரத்துறை செயலாளர் அளித்த உறுதியை ஏற்று, நவம்பர் 3-ந்தேதி வரை காத்திருக்க செவிலியர் சங்க நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். இதனால், தற்போது அறிவிக்கப்பட்டிருந்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நவம்பர் 3-ந் தேதிக்குள் கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்க செவிலியர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன. உறுதியளித்தபடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.