அங்கன்வாடி மையத்தில் குழந்தைக்கு வழங்கிய முட்டையில் கோழிக்குஞ்சு: பெற்றோர் அதிர்ச்சி

தூத்துக்குடி மாவட்டத்தில் ரெகுராமபுரம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைக்கு வழங்கிய முட்டையில் கோழிக்குஞ்சு இருந்தது தொடர்பாக சமூக குழந்தைகள் நலத்திட்ட அலுவலர் விசாரணை நடத்தினார்.
அங்கன்வாடி மையத்தில் குழந்தைக்கு வழங்கிய முட்டையில் கோழிக்குஞ்சு
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் ரெகுராமபுரம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைக்கு வழங்கிய முட்டையில் அழுகிய நிலையில் கோழிக்குஞ்சு இருந்த விவகாரம் தொடர்பாக நேற்று சமூக குழந்தைகள் நலத்திட்ட அலுவலர் விசாரணை நடத்தினார்.

அங்கன்வாடி மையம்

தூத்துக்குடி மாவட்டத்தில் புதூர் அருகே உள்ள ரெகுராமபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் 20 குழந்தைகள் படித்து வருகின்றனர். இங்கு சொர்ணமாரி என்பவர் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த மையத்தில் குழந்தைகளுக்கு வாரத்தில் திங்கள், புதன், வியாழன் ஆகிய 3 நாட்களுக்கு முட்டை வழங்கப்படுகிறது. இதில், மையத்துக்கு வரும் 1 வயதிலிருந்து 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பெற்றோரிடம் வாரத்துக்கு 3 முட்டைகள் வழங்கப்படும். மற்ற குழந்தைகளுக்கு மையத்திலேயே முட்டையை வேக வைத்து, உணவுடன் சேர்த்து வழங்கப்படுகிறது.

முட்டையில் இறந்த நிலையில் கோழிக்குஞ்சு

இந்த நிலையில் கடந்த 20-ந்தேதி இந்த மையத்தில் 1 வயது குழந்தையின் பெற்றோரிடம் 3 முட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. அதனை வீட்டுக்கு கொண்டு சென்ற பெற்றோர். நேற்று முன்தினம் (செவ்வாய்கிழமை) ஒரு முட்டையை வேக வைத்தனர். சிறிது நேரத்தில் அந்த முட்டையை உடைத்தபோது, அதில் கோழிகுஞ்சு இறந்து அழுகிய நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த முட்டையை மையத்துக்கு எடுத்து சென்று ஊழியரிடம் காண்பித்துள்ளனர். அதற்கு அவர் சரிவர பதில் சொல்லவில்லை என கூறப்படுகிறது. இது மற்ற பெற்றோருக்கும் தெரியவந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிகாரி விசாரணை

இதை தொடர்ந்து நேற்று சமூக குழந்தைகள் நலத்திட்ட அலுவலர் பத்மா அந்த அங்கன்வாடி மையத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். அவர் கூறுகையில், "பிரச்சினைக்குரிய முட்டையின் ஓடுகளை பரிசோதித்து, அவை அரசு சார்பில் வழங்கப்பட்டதா? அல்லது வெளியே இருந்து வாங்கி பயன்படுத்திய முட்டையா? என்பது குறித்து அறிந்த பின்னர் மேல்நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com