கொளத்தூர் மக்கள் கேடுகெட்டவர்கள்; திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் சர்ச்சை பேச்சு

இருவரும் திருச்செந்தூரில் போட்டிப்போட்டு பார்க்கலாமா? என்று ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்டுள்ளார்.
கொளத்தூர் மக்கள் கேடுகெட்டவர்கள்; திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் சர்ச்சை பேச்சு
Published on

உடன்குடி,

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. அனிதா ஆர். ராதாகிருஷ்ணன். இவர் கடந்த திமுக ஆட்சியில் மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக இருந்தார். நடந்து முடிந்த தேர்தலில் இவர் திருச்செந்தூர் தொகுதியில் 5 ஆயிரத்து 872 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் முருகன் 66 ஆயிரத்து 851 வாக்குகள் பெற்றார்.

இதனிடையே, தேர்தலில் வெற்றிபெற்றதை தொடர்ந்து திமுக எம்.எல்.ஏ. அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் தொகுதியில் உள்ள பகுதிகளுக்கு சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

அந்த வகையில் உடன்குடியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது,

எவர் எவரோ ஆட்சிக்கு வந்துவிட்டு ஏதேதோ பேசவேண்டுமென நினைக்கிறார்கள். இன்னும் 4 மாதம் தான் இந்த ஆட்சி இருக்கும்.

ஆதவ் அர்ஜுனா என்று ஒரு நபர் இருக்கிறார். ஆதவ் அர்ஜுனாவுக்கு தைரியம், திராணி இருந்தால் வில்லிவாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு திருச்செந்தூருக்கு வரவேண்டும். திருச்செந்தூர் எம்.எல்.ஏ. பதவியை நானும் ராஜினாமா செய்கிறேன். இருவரும் திருச்செந்தூரில் போட்டிப்போட்டு பார்க்கலாமா?

நீங்கள் (ஆதவ் அர்ஜுனா) வளர்ந்துவிட்டால் என்ன செய்யமுடியும். இது எந்த ஊர் தெரியுமா? எந்த வகையிலும் எவரையும் வீழ்த்திவிடுவோம்.

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியிடவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

மு.க.ஸ்டாலின் தனது தொகுதியான கொளத்தூரை சிங்கப்பூர் போன்று மாற்றி வைத்திருந்தார். ஆனால், கொளத்தூர் தொகுதி மக்கள் கேடுகெட்டவர்கள்.

உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல் என எந்த தேர்தலிலும் தமிழக வெற்றிக் கழகம் எந்த இடத்திலும் நுழைய முடியாத அளவுக்கு அடித்து விரட்டுவோம்.

4 முதல் 6 மாதங்களில் மு.க.ஸ்டாலின் தான் அடுத்த முதல் அமைச்சர் ஆவார். தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு விற்க ஆதவ் அர்ஜுனா பார்க்கிறார். லாட்டர் சீட்டில் கொள்ளையடிக்கும் பாவி ஆதவ் அர்ஜுனா. அவர் கொள்ளையடிக்க அவருக்கு நிறைய பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

கள்ள லாட்டரி சீட்டு விற்பவரும், கஞ்சா விற்பவரும் தவெக எம்.எல்.ஏ.வாக மாறியுள்ளனர்.

பெண்கள் எல்லாருக்கும் பாதுகாப்பு கொடுப்போம் என சொல்கிறாரே முதல்-அமைச்சர் விஜய் தனது மனைவிக்கு முதலில் பதில் சொல்ல வேண்டும். முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்றபோது அவரது பதவியேற்பு விழாவிற்கு அவரது மனைவி, மகள் வந்தனரா? இப்படிப்பட்டவர் தமிழக முதல்-அமைச்சராக வந்துள்ளார் என்றால் தமிழக கெட்டுவிட்டது, அழிந்து விட்டது என்றுதான் அர்த்தம்

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com