வெயிலின் தாக்கத்தில் தண்ணீருக்காக தவிக்கும் மக்கள்: கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன்மடம் ஊராட்சியில் உள்ள பகுதிகளில், கடும் கோடை வெயிலின் தாக்கத்தில் குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
வெயிலின் தாக்கத்தில் தண்ணீருக்காக தவிக்கும் மக்கள்: கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன்மடம் ஊராட்சியில் உள்ள காமராஜர் நகர் மற்றும் சக்கம்மாள்புரம் பகுதிகளில், கடும் கோடை வெயிலின் தாக்கத்தில் குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

இந்த பகுதிகளுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் (TWAD) மூலம் CWSS கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ஆற்று தண்ணீர் விநியோகிக்கப்பட வேண்டும். ஆனால் பைப் லைன் வழித்தடங்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டதால், அந்த பகுதிகளுக்கு செல்லும் பைப் லைன்கள் சேதமடைந்து கடந்த 4 மாதங்களாக குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

சாயர்புரம்-தேரி சாலை பகுதியில் அடிக்கடி பைப் உடைப்பு ஏற்பட்டதால், சாயர்புரத்திலிருந்து காமராஜர்நகர் வழியாக செல்லும் பைப் லைன் மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் அந்த பகுதியில் தேரி சாலை விரிவாக்கம் பணிகளும் நடைபெற்றன. அந்த பணிகளின் போது காமராஜர்நகர் மற்றும் சக்கம்மாள்புரம் பகுதிகளுக்கு செல்லும் பைப் லைன் சுமார் 600 மீட்டர் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் பழுதடைந்த பைப் லைன்களை இதுவரை மாற்றாததால், காமராஜர்நகர் மற்றும் சக்கம்மாள்புரம் பகுதிகளில் கடந்த 4 மாதங்களாக குடிநீர் விநியோகம் நடைபெறாமல் உள்ளது. இதனால் தற்போது கோடை காலத்தின் கடும் வெயிலில் பொதுமக்கள் குடிப்பதற்கே தண்ணீரை பணம் கொடுத்து வாங்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த நிலையில் சாயர்புரம்-தேரி சாலை பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் பணிகள் முடிந்தும், தேரி மேல் நிலை தேக்கத் தொட்டியிலிருந்து காமராஜர் நகர் மற்றும் சக்கம்மாள்புரம் பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கும் பைப் லைன் பணிகள் இன்னும் நடைபெறவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து சேர்வைக்காரன்மடம் ஊராட்சியின் முன்னாள் துணை தலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா, பொதுமக்கள் சார்பில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்து, பழுதடைந்த பைப் லைன்களை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் போர்கால அடிப்படையில் உடனடியாக மாற்றி குடிநீர் விநியோகத்தை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com