இடைத்தேர்தலில் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் - அமைச்சர் ரமேஷ்

இடைத்தேர்தலில் பணம் கொடுத்து வாக்கு சேகரிக்க வேண்டிய அவசியமோ, நிலையோ த.வெ.க.வுக்கு இல்லை.
இடைத்தேர்தலில் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் - அமைச்சர் ரமேஷ்
Published on: 

திருச்சி,

திருச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தகுந்த பாடம்

இடைத்தேர்தலில் பணம் கொடுத்து வாக்கு சேகரிக்க வேண்டிய அவசியமோ, நிலையோ த.வெ.க.வுக்கு இல்லை. தி.மு.க.வினர் பொதுவெளியில் நாகரிகமாக பேச கற்றுக்கொள்ள வேண்டும். பேரறிஞர் அண்ணா சொல்லிக்கொடுத்த ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’ என்ற கொள்கைகளை அவர்கள் பின்பற்ற வேண்டும்.

இல்லையென்றால், கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அந்த தொகுதி மக்கள் பாடம் புகட்டியது போல, தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் தி.மு.க.வுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

ரூ.50 கோடி கோவில் நிலம்

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான சுமார் ரூ.50 கோடி மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமித்து, போலி ஆவணங்கள் மூலம் நில அபகரிப்பு செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகார் தொடர்பாக தி.மு.க. பகுதி செயலாளர் ராம்குமாரை போலீசார் பஞ்சப்பூர் பகுதியில் கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக, நிலத்தை விலைக்கு வாங்கிய தி.மு.க. நிர்வாகி ராம்குமார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு அந்த நிலத்தை முறைகேடாக விற்பனை செய்ததாக கூறப்படும் புதுச்சேரியை சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதியும் கைது செய்யப்படுவாரா? என்று அமைச்சர் ரமேஷிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், இந்த நில மோசடி வழக்கில் சட்டப்படி படிப்படியாக அனைத்து நடவடிக்கைகளும் தொடரும் என்று பதில் அளித்தார்.

தொடர் போராட்டம்

இந்திய தேர்தல் ஆணையர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி ‘இந்தியா’ கூட்டணியினர் தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்தில் த.வெ.க. பங்கேற்குமா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து த.வெ.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான விஜய் முறைப்படி அறிவிப்பார் என்று அமைச்சர் ரமேஷ் பதில் அளித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com