பேரிஜம் ஏரியில் படகு சவாரி செய்ய பெரியகுளம் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு; வனத்துறை அதிகாரியிடம் மனு

கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் படகு சவாரி செய்வதற்கு பெரியகுளம் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். படகு சவாரிக்கு தடை விதிக்கக்கோரி நகராட்சி கவுன்சிலர்கள், வனத்துறை அதிகாரியிடம் மனு கொடுத்தனர்.
Published on

கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் படகு சவாரி செய்வதற்கு பெரியகுளம் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். படகு சவாரிக்கு தடை விதிக்கக்கோரி நகராட்சி கவுன்சிலர்கள், வனத்துறை அதிகாரியிடம் மனு கொடுத்தனர்.

குடிநீர் ஆதாரம்

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக கொடைக்கானல் பேரிஜம் ஏரி உள்ளது. அங்கிருந்து நகரின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு தினமும் 3 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த நீரானது ஏரியில் இருந்து மலைப்பகுதிகள் வழியாக கால்வாய் மூலமாக சோத்துப்பாறை அணைக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர் நகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு குழாய் மூலம் பெரியகுளம் நகரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் ஏற்றப்பட்டு, வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பல ஆண்டுகளாக பேரிஜம் ஏரியில் இருந்து பெரியகுளம் நகர் பகுதிக்கு தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. இதற்காக பேரிஜம் ஏரியில் தண்ணீர் வெளியேறும் ஷட்டரின் சாவி பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் உள்ளது.

மேலும் சோத்துப்பாறை கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் வடுகப்பட்டி, தாமரைக்குளம், தென்கரை ஆகிய பேரூராட்சிகளுக்கும், லட்சுமிபுரம், சருத்துப்பட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளுக்கும் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

பொதுமக்கள் எதிர்ப்பு

இந்தநிலையில் நேற்று முன்தினம் முதல் கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் வனத்துறை மூலம் சுற்றுலா பயணிகளுக்கான படகு சவாரி தொடங்கியது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில், இயற்கை எழில்சூழ உள்ள ஏரியில் படகு சவாரி செய்வதன் மூலம் தண்ணீர் மாசடைய வாய்ப்புள்ளதாக கூறி பெரியகுளம் பகுதி பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பெரியகுளத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூக அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் பெரியகுளத்தில் நடைபெற்றது. இதில், பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார் கலந்துகொண்டு பேசினார். அப்போது பெரியகுளம் நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பேரிஜம் ஏரி தண்ணீரை மாசடைய அனுமதிக்கக்கூடாது. எனவே குடிநீர் ஆதாரத்தை பாதிக்காத வண்ணம் படகு சவாரிக்கு தடை விதித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு பதில் அளித்து பேசிய சரவணக்குமார் எம்.எல்.ஏ., இதுதொடர்பாக அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

வனத்துறை அதிகாரியிடம் மனு

இதற்கிடைய பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் நகராட்சி தலைவர் சுமிதா சிவக்குமார், ஆணையாளர் கணேஷ் மற்றும் அனைத்துக்கட்சி கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், பேரிஜம் ஏரியில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்வதற்கு கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெரியகுளம் நகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள இந்த ஏரியில் படகு சவாரி செய்வதால் தண்ணீர் மாசடைய வாய்ப்புள்ளது என்று கூறினர்.

பின்னர் கூட்டத்தில், கொடைக்கானல் மாவட்ட வன அலுவலரை நேரில் சந்தித்து படகு சவாரிக்கு தடை விதிக்கக்கோரி மனு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பெரியகுளம் நகராட்சி தலைவர் தலைமையில் அனைத்துக்கட்சி கவுன்சிலர்களும் கொடைக்கானலுக்கு சென்றனர். அங்கு மாவட்ட வன அலுவலர் யோகேஷ்குமார் மீனாவை நேரில் சந்தித்து, பேரிஜம் ஏரியில் படகு சவாரி செய்ய தடை விதிக்க வலியுறுத்தி மனு கொடுத்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com