பிளஸ்-2 பொதுத்தேர்வு: மாணவர்களின் விவரங்களை இன்று முதல் பதிவேற்ற உத்தரவு!

கட்டணம் செலுத்திய பின்னர் மாணவர்களின் விவரங்களில் எந்தத் திருத்தமும் மேற்கொள்ள முடியாது.
பள்ளிக்கல்வித்துறை
Published on: 

சென்னை,

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான மாணவர்களின் விவரங்களை இன்று முதல் அக்டோபர் 31-ந் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மாணவர்களின் விவரங்கள்

இது குறித்து, பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் மாணவர்களின் விவரங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். மாணவர்கள் மற்றும் பெற்றோரின் பெயர்களில் தமிழில் திருத்தம் செய்ய வேண்டியிருந்தால், ஏற்கனவே உள்ள பெயரை முழுமையாக நீக்கிய பிறகே புதிய பெயரைப் பதிவுசெய்ய வேண்டும்.

மேலும், தேர்வில் சிறப்புச் சலுகைகள் கோரும் மாற்றுத்திறனாளி மாணவர்கள், தங்களது அடையாள அட்டை அல்லது உரிய மருத்துவரிடம் பெற்ற சான்றிதழை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்வது கட்டாயமாகும்.

ஒவ்வொரு மாணவரின் உறுதிமொழிப் படிவத்தையும் பதிவிறக்கம் செய்து, அதில் இடம்பெற்றுள்ள விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளனவா என்பதைச் சரிபார்த்த பிறகே தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்திய பின்னர் மாணவர்களின் விவரங்களில் எந்தத் திருத்தமும் மேற்கொள்ள முடியாது.

முழு பொறுப்பு

உறுதிமொழிப் படிவத்தில் உள்ள விவரங்களை வகுப்பாசிரியரும், பள்ளித் தலைமை ஆசிரியரும் கவனமாகச் சரிபார்த்த பிறகே கையெழுத்திட வேண்டும். மாணவர்களின் விவரங்களில் பிழைகள் கண்டறியப்பட்டால், அதற்குச் சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியரும் தலைமை ஆசிரியரும் முழுப் பொறுப்பேற்க வேண்டும். தவறு நிகழும் பட்சத்தில் அவர்கள் மீது துறைரீதியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com