ராமதாஸ் தலைமையில் நாளை மறுதினம் பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சட்டசபை தேர்தல் குறித்தும், கூட்டணி குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராமதாஸ் தலைமையில் நாளை மறுதினம் பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
Published on

விழுப்புரம்,

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நாளை மறுதினம் பாமக மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், வன்னியர் சங்க நிர்வாகிகளின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் ராமதாஸ் வீடு அமைந்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் இந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தல் குறித்தும், கூட்டணி குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கூட்டம் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில்,

பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் உள்ளிட்ட சார்பு அமைப்புகளின் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் பங்கேற்கும் கலந்தாய்வு கூட்டம் 26.02.2026 வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு தைலாபுரம் தோட்டத்தில் எனது தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தல் குறித்து கலந்தாலோசிக்கப்பட உள்ளது. எனவே மேற்குறிப்பிட்டுள்ள நிர்வாகிகள் அனைவரும் அவசியம் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென அன்புடன் அழைக்கிறேன்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சட்டசபை தேர்தலில் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக தரப்பு அதிமுக கூட்டணியில் இடம்பெற்றது.

அதேவேளை, ராமதாஸ் தலைமையிலான பாமக தரப்பு தேர்தல் கூட்டணி குறித்து இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் நாளை மறுதினம் நடைபெறும் கூட்டத்தில் கூட்டணி குறித்த முக்கிய அறிவிப்பை ராமதாஸ் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com