

நெல்லை,
நெல்லையில் வாகன சோதனையின்போது வாகன ஓட்டியிடம் ஜி-பே மூலம் லஞ்சம் கேட்ட போலீஸ் ஏட்டை மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை மேலப்பாளையம் காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாகப் பணிபுரிந்து வருபவர் சொர்ணராஜ். இவர் மேலக்கருங்குளம் சோதனைச்சாவடியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒரு நபரை தடுத்து நிறுத்தி ஆவணங்களை சரிபார்த்தனர். இதில் அவரது வாகனத்திற்கு சரியான காப்பீடு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து அங்கிருந்த உயர் அதிகாரி, அந்த நபருக்கு அறிவுரை வழங்கி உடனடியாக காப்பீடு செய்யுமாறு கூறி அனுப்பி வைத்துள்ளார். இருப்பினும், ஏட்டு சொர்ணராஜ் அந்த நபரிடம் தனியாக சென்று, கையில் பணம் ஏதேனும் இருந்தால் கொடுத்துவிட்டுச் செல்லுமாறு கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர், "கையில் ரொக்கம் இல்லை, ஜி-பே மூலம் அனுப்புகிறேன்" என கூறி எண் கேட்டுள்ளார். உடனே ஏட்டு சொர்ணராஜ் ஒரு செல்போன் எண்ணை கொடுத்து, அதற்கு பணத்தை அனுப்புமாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து அந்த நபர், "பணம் வந்துவிட்டதா?" என கேட்க, ஏட்டு சொர்ணராஜ் "இன்னும் பணம் வரவில்லை" என்று கூறும் உரையாடலின் ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாகப் பரவியது.
இந்த விவகாரம் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய்யின் கவனத்திற்கு சென்றது. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்ட கமிஷனர், துறை ரீதியான நடவடிக்கை எடுத்து ஏட்டு சொர்ணராஜை உடனடியாக பணி இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டார். இச்சம்பவம் போலீசார் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.