

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (28.6.2026) 1,176 மையங்களில், சுமார் 1 லட்சத்து 13 ஆயிரத்து 781 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் விஷு மகாஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இளம்பிள்ளை வாதம் நோய் வராமல் தடுப்பதற்கான தேசிய பல்ஸ் போலியோ சொட்டுமருந்து முகாம் தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (ஜூன் 28, ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 1,176 போலியோ சொட்டுமருந்து மையங்களில், 4,704 பணியாளர்களைக் கொண்டு மொத்தம் 1 லட்சத்து 13 ஆயிரத்து 781 குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த சொட்டுமருந்து முகாம் அனைத்து அரசு மருத்துவமனைகள், வட்டார சுகாதார மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் நடைபெறும்.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான தற்காலிக குடியிருப்புகள், கோவில் திருவிழாக்கள், பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள், கல்யாண நிகழ்ச்சிகள் மற்றும் இலங்கை அகதிகள் முகாம் ஆகிய இடங்களில் உள்ள 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்குச் சொட்டுமருந்து வழங்குவதற்காக 12 நடமாடும் குழுக்களும் (Mobile Teams) அமைக்கப்பட்டுள்ளன.
5 வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளின் பெற்றோர்களும் நாளை தவறாமல் தங்களது குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து செலுத்தி பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.