மாணவன் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம்: நிவேதா மீது தாக்குதல்? - வேல்முருகன் கண்டனம்

காவல்துறையின் அத்துமீறல் குறித்த குற்றச்சாட்டுகளை மூடிமறைக்காமல், வெளிப்படையாக விசாரிக்க வேண்டும்.
வேல்முருகன்
Published on

சென்னை,

நிவேதா மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியிருப்பது கண்டனத்திற்குறியது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

காவல்துறையினர் தாக்குதல்

மாணவன் தமிழ்ச்செல்வன் மரணத்திற்கு நீதி கேட்டு, மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நடைபெற்ற போராட்டத்தின் போது, தோழர் நிவேதா மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

மாணவரின் மரணம் குறித்து எழுந்துள்ள சந்தேகங்களுக்கு விடை கேட்டு ஜனநாயக வழியில் போராடியவர்களை, காவல்துறையின் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒடுக்க முயல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. நீதிக்காகக் குரல் கொடுக்கும் ஒரு பெண் மீது காவல்துறையினர் வன்முறையை ஏவுவது, சட்டத்தின் ஆட்சிக்கும் ஜனநாயக உரிமைகளுக்கும் விடுக்கப்படும் அச்சுறுத்தலாகும்.

விசாரணை

போராட்டத்தில் ஈடுபட்ட தோழர் நிவேதா மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது உடனடியாக உரிய விசாரணை நடத்தி, தவறு உறுதிசெய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையின் அத்துமீறல் குறித்த குற்றச்சாட்டுகளை மூடிமறைக்காமல், வெளிப்படையாக விசாரிக்க வேண்டும்.

சிபிசிஐடி

அதேவேளையில், மாணவன் தமிழ்ச்செல்வனின் மரணம் தொடர்பான உண்மை முழுமையாக வெளிச்சத்திற்கு வர வேண்டும். இந்த வழக்கில் தற்போதைய விசாரணை குறித்து குடும்பத்தினருக்கும் பொதுமக்களுக்கும் எழுந்துள்ள சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழ்நாடு முதல்-அமைச்சரை நேரடியாகத் தலையிட்டு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

அரசின் கடமை

மரணத்தின் பின்னணியில் உள்ள ஒவ்வொரு உண்மையும் கண்டறியப்பட வேண்டும். குற்றம் நடைபெற்றிருப்பது விசாரணையில் தெரியவருமானால், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு முழுமையான நீதி கிடைக்க வேண்டும்.

மக்களின் கேள்விக்கு அதிகாரத்தின் அடக்குமுறை பதிலாக இருக்கக்கூடாது. உண்மையையும் நீதியையும் நிலைநாட்டுவதே அரசின் கடமை.

வலியுறுத்தல்

மாணவன் தமிழ்ச்செல்வன் மரணத்திற்கு முழுமையான நீதியைப் பெற்றுத்தரவும், போராட்டத்தின்போது காவல்துறையினரால் நடத்தப்பட்ட அத்துமீறல் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவும், தமிழ்நாடு முதல்-அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com