

நாடு முழுவதும் தகுதியான ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பொது விநியோக திட்டத்தை சீரமைக்கவும், தகுதியில்லாத மற்றும் போலி ரேஷன் கார்டுகளை கண்டறிந்து நீக்கவும் மத்திய உணவு துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கடந்த 6 மாதங்களாக ஒருமுறை கூட ரேஷன் கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்காத ரேஷன் கார்டுகளை நாளை முதல் தற்காலிகமாக முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால், நாடு முழுவதும் சுமார் 1.5 கோடி ரேஷன் கார்டுகள் முடக்கப்படும் என தெரிகிறது.
இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. எனினும், பயனாளிகள் யாரும் உடனடியாக அச்சப்பட தேவையில்லை என்று அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
6 மாதமாக பொருட்கள் வாங்காதவர்களின் ரேஷன் கார்டுகள் முதற்கட்டமாக தற்காலிகமாக மட்டுமே முடக்கப்படும். அவர்களின் பெயர்கள் ரேஷன் கணினி பட்டியலில் இருந்து உடனடியாக நிரந்தரமாக நீக்கப்படாது.
குடும்பத்தில் உள்ள நபர் இறந்திருந்தாலோ, ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட கார்டுகளை வைத்திருந்தாலோ அல்லது வெளி இடங்களுக்கு இடம்பெயர்ந்த பிறகும் பழைய கார்டுகளை வைத்திருக்க கூடும் என்பதால் இந்த நடவடிக்கை பாய்கிறது.
ரேஷன் கார்டு தரவுகளை கணினிமயமாக்குதல், ஆதார் இணைப்பு, கைவிரல் ரேகை பதிவு உள்ளிட்ட பணிகளும் நடந்து வருகின்றன. கடந்த 2024-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், கணக்குச் சரிபார்ப்பு நடவடிக்கைகளின் மூலம் சுமார் 5.8 கோடி ரேஷன் கார்டுகள் நீக்கப்பட்டதாக மத்திய உணவுத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 30-ந்தேதி நிலவரப்படி, ரேஷன் கார்டுகளுக்கான கைவிரல் ரேகை பதிவு பணிகள் 90.64 சதவீதம் நிறைவடைந்து உள்ளதாக மத்திய உணவுத்துறை தெரிவித்துள்ளது.
தவிர்க்க முடியாத காரணங்களால் ரேஷன் பொருட்களை வாங்க முடியாமல் போன உண்மையான பயனாளிகளுக்கு தங்களது கார்டுகளை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர அரசு வாய்ப்பு வழங்கியுள்ளது.
முடக்கப்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் தங்களின் தகுதியை நிரூபிக்க நாளை முதல் ஜனவரி 1 வரை 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த 3 மாத காலத்திற்குள் சம்பந்தப்பட்ட பயனாளிகள் அனைவரும் தங்களது குடும்ப உறுப்பினர்களின் விவரங்களுடன் கைவிரல் ரேகை பதிவு நடைமுறையை சரிவர முடிக்க வேண்டும்.
கைவிரல் ரேகை பதிவு செய்யப்பட்ட விவரங்களை அதிகாரிகள் கள ஆய்வு செய்து, கார்டு தகுதியானது தான் என்பதை உறுதி செய்தவுடன், முடக்கப்பட்ட ரேஷன் கார்டுகள் மீண்டும் உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உணவு பொருட்கள் தடையின்றி வழங்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.