கடலுக்கு செல்லும் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

கடலில் காணாமல் போகும் மீனவர்களை தேடும் பணிகளை துரிதப்படுத்த, பல்வேறு பாதுகாப்பு படைகள் மீன்வளத்துறையுடன் ஒருங்கிணைந்து செயல்பட முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
கடலுக்கு செல்லும் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் ஆய்வுக்கூட்டம்
முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்
Published on: 

சென்னை,

மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லும்போது அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்தல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்றது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:-

ஆய்வுக்கூட்டம்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று தலைமை செயலகத்தில், மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லும்போது இயற்கை பேரிடர்களால் கடலில் காணாமல்போவது மற்றும் உயிரிழப்பு போன்ற இன்னல்களை சந்திக்க நேரிடுவது தொடர்பாகவும், தற்போது வடகிழக்கு பருவமழைக் காலமாக உள்ளதால், தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் ஏற்படக்கூடிய புயல் மற்றும் இயற்கை இடர்பாடுகளின்போது, கடலில் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருக்கும் மீனவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது தொடர்பாகவும் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

இக்கூட்டத்தில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் புயல் மற்றும் இயற்கை இடர்ப்பாடுகளின்போது, மீனவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தற்பொழுது பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்து விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது.

சட்டங்கள்

மேலும், மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகுகள் கடலில் இடர்ப்பாடுகளை சந்திக்கும் அவசர காலங்களில், மீனவர்கள் இருக்கும் இடத்தை துல்லியமாக கண்டறிவதற்கான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல், கடலில் மீனவர்களின் தகவல் தொடர்பு கருவிகளை மேம்படுத்துதல், படகு மற்றும் அதன் இயந்திரங்கள் கடலில் செல்லத்தக்க வகையில் இருப்பதை உறுதிசெய்தல், இவை தொடர்பான சட்டங்களை முறையாக அமல்படுத்துதல் குறித்தும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.

தேடுதல் மற்றும் மீட்பு பணி

மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லும்போது காணாமல் போகும் நேர்வில், கடல்வள சட்ட அமலாக்க பிரிவு, கடலோர காவல் குழுமம், இந்திய கடலோர காவல் படை மற்றும் இந்திய கப்பற்படை போன்ற பல்வேறு அமைப்புகள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையுடன் ஒருங்கிணைந்து, விரைந்து தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் ஆதவ் பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் ராஜ்மோகன், நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சி துறை அமைச்சர் மரிய வில்சன், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், தலைமை செயலாளர் சாய்குமார், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளர் அனு ஜார்ஜ், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் விஜயகார்த்திகேயன், இந்திய கடற்படை தமிழ்நாடு & புதுச்சேரி பகுதிகளுக்கான தலைவர் ரியர் அட்மிரல் உப்பல் குண்டு, VSM, கடலோர காவல் படை கிழக்கு மண்டல இன்ஸ்பெக்டர் ஜெனரல் யோகிந்தர் டாக்கா, TM, இந்திய கடற்படை தமிழ்நாடு & புதுச்சேரி பகுதிகளுக்கான தலைமையக கடலோரப் பாதுகாப்பு அலுவலர் கேப்டன் ஜென்னிஸ் பால், தமிழ்நாடு அரசின் கடலோரக் காவல் பாதுகாப்புக் குழுத் தலைவர் பிரவேஷ் குமார், இந்திய கடலோரக் காவல் படை துணைத் தலைவர் முருகன், கடல் மீன்வள அமலாக்கப் பிரிவு அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X