அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு ரூ.5 லட்சம் பரிசு: திருநெல்வேலி கலெக்டர் தகவல்


அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு ரூ.5 லட்சம் பரிசு: திருநெல்வேலி கலெக்டர் தகவல்
x

பயிர் விளைச்சல் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயி, குறைந்தபட்சம் 2 ஏக்கர் பரப்பளவில் திருந்திய நெல் சாகுபடி முறை மூலம் நெல் பயிரிடுபவராக இருக்க வேண்டும்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சுகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை கடைபிடித்து மாநிலத்திலேயே அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு "சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது" சிறப்பு பரிசாக ரூ.5 லட்சம் மற்றும் ரூ.7,000 மதிப்புள்ள பதக்கம் ஆகியவை தமிழ்நாடு முதல்-அமைச்சரால் வழங்கப்படும். எனவே திருநெல்வேலி மாவட்டத்தில் திருந்திய நெல் சாகுபடி முறை மூலம் நெல் பயிரிடும் விவசாயிகள் இப்பயிர் விளைச்சல் போட்டியில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பயிர் விளைச்சல் போட்டியில் பங்குபெற தகுதிகள்:

பயிர் விளைச்சல் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயி, குறைந்தபட்சம் 2 ஏக்கர் பரப்பளவில் திருந்திய நெல் சாகுபடி முறை மூலம் நெல் பயிரிடுபவராக இருக்க வேண்டும். அவர் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் திருந்திய நெல் சாகுபடி முறை மூலம் நெல் பயிர் சாகுபடி செய்யும் முன்னோடி விவசாயியாக இருக்க வேண்டும்.

குத்தகைதாரர்களும் பயிர் விளைச்சல் போட்டியில் கலந்து கொள்ள தகுதியுடையவர்கள். பயிர் விளைச்சல் போட்டியில் கலந்து கொள்ளும் விவசாயிகள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட அறிவிக்கை செய்யப்பட்ட நெல் ரகங்களை மட்டுமே பயிர் செய்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

போட்டியில் கலந்து கொள்ளும் விவசாயிகள் உரிய விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து பதிவுக் கட்டணம் ரூ.150-ஐ வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களிடம் செலுத்தி பதிவு செய்திட வேண்டும். பதிவு கட்டணம் திருப்பி தரப்படமாட்டாது.

விண்ணப்பத்துடன் நெல் பயிரிடப்பட்டுள்ள பரப்பின் சான்று ஆவணங்களான சிட்டா, அடங்கல் ஆகியவை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும். மேலும் கூடுதல் விபரங்களுக்கு தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story