101-ம் ஆண்டு தொடக்க விழா: தமிழகத்தில் 100 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம்

சென்னையில் எழும்பூர், பெரம்பூர் உள்ளிட்ட 7 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது
101-ம் ஆண்டு தொடக்க விழா: தமிழகத்தில் 100 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம்
Published on: 

சென்னை,

ஆர்.எஸ்.எஸ். 101-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி சென்னையில் 7 இடங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 100 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

101-ம் ஆண்டு தொடக்க விழா

ஆர்.எஸ்.எஸ். எனப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் கடந்த 1925-ம் ஆண்டு விஜயதசமி அன்று தொடங்கப்பட்டது. எனவே ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியின்போது ஆர்.எஸ்.எஸ். சார்பில் சீருடை அணிந்த தொண்டர்களின் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். தமிழ்நாட்டில் இப்பேரணிக்கு கடந்த தி.மு.க. ஆட்சியில் அனுமதி மறுக்கப்பட்டது.

அணிவகுப்பு ஊர்வலம்

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து அனுமதி பெற்று பேரணி நடத்தப்பட்டது. இந்த ஆண்டும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் கோர்ட்டு அனுமதியுடன் தமிழகம் முழுவதும் 100 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். 101-ம் ஆண்டு தொடக்க விழா அணிவகுப்பு ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று நடைபெற்றது.

தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்பு

சென்னையில் சாரல் மழைத்துளிகளுக்கு மத்தியில் எழும்பூர், பெரம்பூர், கொரட்டூர், திருவொற்றியூர், மேடவாக்கம், குரோம்பேட்டை, அய்யப்பன்தாங்கல் ஆகிய 7 இடங்களில் இந்த ஊர்வலம் நடந்தது. எழும்பூரில் ஊர்வலம் தொடங்குவதற்கு முன்பாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் காவிக்கொடிக்கு பூஜை மற்றும் வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் முன்னாள் கவர்னரும், பா.ஜ.க. முன்னாள் தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார்.

ஊர்வலம் நிறைவடைந்த இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் சுவாமி அபவர்கானந்த மஹராஜ் ஆசியுரை வழங்கினார். ஆர்.எஸ்.எஸ். தென்பாரத உறுப்பினர் ஆனந்த் ரகுநாதன் சிறப்புரையாற்றினார். நவம்பர் 1-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாட்டில் 28 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம், பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com