

சென்னை,
சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளையொட்டி கவர்னர் அர்லேகர் புகழாரம் சூட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
பர்தோலியில் விவசாயிகளின் நலன் காக்க ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றதால் மக்களால் அன்புடன் சர்தார் (தலைவர்) என்று அழைக்கப்பட்டவர். தாம் வழக்கறிஞராக வாதாடிக் கொண்டிருந்த சமயத்தில் தன் மனைவி இறந்த தகவல் வந்தும், விசாரணை முடிந்து வழக்கு வெற்றி பெற்றபின் அனைவரிடமும் தெரிவித்து அங்கிருந்து விடைபெற்றவர்!
சுதந்திர போராட்ட காலத்தில் எரவாடா சிறையில் அடைக்கப்பட்ட போது காந்தியிடம் நெருங்கிய நட்பு கொண்டார். விடுதலை பெற்ற பின்னர் தமக்கு காத்திருந்த பிரதமர் பதவியை காந்தியின் வேண்டுகோளின் படி நேருவிற்கு விட்டுக் கொடுத்தவர்.
சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதமர் மற்றும் உள்துறை மந்திரி. சிதறிக்கிடந்த 565 சமஸ்தானங்களை மிகக் குறுகிய காலத்தில் ஒன்றிணைத்து அகண்ட பாரதம் கண்டவர். அதனால் இந்தியாவின் இரும்பு மனிதர் எனப் போற்றப்படுபவர். இந்திய நிர்வாகப் பணிகளை அறிமுகம் செய்தவர். நர்மதை நதியின் கரையில் உலகின் உயர்ந்த சிலையாக உருக்கொண்டிருக்கும் அன்னாரை அவர் பிறந்த நாளில் போற்றி வணங்குவோம்!"
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.