

சென்னை,
விண்வெளியில் நாளை ஒரு அபூர்வ மற்றும் கண்கொள்ளாக் காட்சி அரங்கேற உள்ளது. சூரிய குடும்பத்தின் அழகிய கிரகமான சனி கிரகம், நாளை விண்வெளியில் வழக்கத்தை விட மிகவும் பிரகாசமாகவும், பெரியதாகவும் காட்சியளிக்கப் போகிறது.
சூரியன், பூமி மற்றும் சனி கிரகம் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது இந்த அரிய நிகழ்வு ஏற்படுகிறது. அதாவது, சூரியனுக்கும் சனி கிரகத்திற்கும் நேர் நடுவே பூமி வரும். வானியலில் இது 'சனி கிரகத்தின் எதிர் நிலை' என்று அழைக்கப்படுகிறது. இதன் காரணமாக, சனி கிரகம் பூமிக்கு மிக அருகில் வந்து, சூரிய ஒளி அதன் மீது முழுமையாக படுவதால் இரவு முழுவதும் ஜொலிக்க போகிறது. இது 2026-ம் ஆண்டின் மிகச்சிறந்த, பிரம்மாண்டமான விண்வெளி காட்சிகளில் ஒன்றாக அமைய உள்ளது.
நாளை மாலை 5.30 மணி அளவில், சனி கிரகம் பூமியில் இருந்து சுமார் 126 கோடி கிலோமீட்டர் தொலைவில் இருக்கும்போது இந்த நிகழ்வு துல்லியமாக தொடங்குகிறது. நாளை மாலை சூரியன் மறையும் அதே நேரத்தில், கிழக்கு வானில் சனி கிரகம் உதிக்கும். பின்னர் விடிய விடிய இரவு முழுவதும் தெளிவாக காட்சியளித்து, மறுநாள் காலை சூரிய உதயத்திற்கு முன்பு மேற்கு வானில் மறையும்.
பொதுவாக சனி கிரகம் 0.3 பிரகாச அளவில் மட்டுமே ஒளிரும் தன்மை கொண்டது. ஆனால், நாளை வெறும் கண்ணால் பார்க்கும் போதே, வானில் மின்னும் ஒரு பிரகாசமான மஞ்சள் நிறப்புள்ளி போல இது பெரிதாக தெரியும். சாதாரண தொலைநோக்கி மூலம் பார்த்தால், சனி கிரகத்தை சுற்றியுள்ள அழகிய வளையங்களையும், அதன் சில துணைக்கோள்களையும் மிக தெளிவாக கண்டு ரசிக்கலாம்.
நாளை மாலை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, பொதுமக்கள் கிழக்கு வானத்தை நோக்கினால் பிரகாசமான, அசையாமல் நிலையாக தெரியும் ஒரு மஞ்சள் நிற புள்ளியை காணலாம். அதுவே சனி கிரகம். நகரத்து வெளிச்சம் மற்றும் மின்விளக்குகளின் ஒளி இல்லாத இருட்டான, திறந்தவெளி மொட்டை மாடி அல்லது மைதான பகுதிகளில் இருந்து பார்த்தால், இந்த விண்வெளி அதிசயத்தை மிகவும் தெளிவாகவும், அழகாகவும் ரசிக்க முடியும்.
இது குறித்து நாசா விஞ்ஞானிகள் கூறி இருப்பதாவது:-
பூமி ஆண்டுக்கு ஒருமுறை சூரியனை சுற்றி வருகிறது. ஆனால் சனி ஒருமுறை சூரியனை சுற்றிவர 29.5 ஆண்டுகள் ஆகும். பூமியின் சுற்றுப்பாதை சிறியது, மேலும் அது சனியை விட வேகமாக நகர்கிறது. ஆண்டுக்கு ஒருமுறை, பூமி சனிக்கும், சூரியனுக்கும் இடையில் கடந்து செல்கிறது.
வானியலாளர்கள் இதை 'எதிர்நிலை' என்று அழைக்கிறார்கள்.சனிக்கிரகத்தை காண்பதற்கு, இந்த ஆண்டின் சிறந்த வாய்ப்புகளில் ஒன்றாக நாளை அமையும்.
இவ்வாறு அதில் கூறினர்.
சனி கிரகம் எதிர்நிலை 378 நாட்களுக்கு ஒருமுறை நிகழ்கிறது. இதற்கு முந்தைய நிகழ்வு கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் 21-ந் தேதி நடந்தது. அடுத்த நிகழ்வு 2027-ம் ஆண்டு அக்டோபர் 16-ந்தேதி நடைபெறும்.