சளி மருந்து குடித்த பச்சிளம் குழந்தை உயிரிழந்ததால் அதிர்ச்சி

நிலக்கோட்டை அருகே சளி மருந்து குடித்த பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நிலக்கோட்டை,
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள சி.புதூரை சேர்ந்தவர் சின்னபாண்டி (வயது 30). டேங்கர் லாரி டிரைவர். அவருடைய மனைவி பானுப்பிரியா. இந்த தம்பதிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு பிரணித் (1) என்ற குழந்தை உள்ளது. கடந்த 26-ந்தேதி அந்த குழந்தைக்கு சளி பிடித்திருந்தது.
இதனையடுத்து அப்பகுதியில் உள்ள கடையில் சளி மருந்து வாங்கி கொடுத்து இரவில் குழந்தையை பெற்றோர் தூங்க வைத்தனர்.
இந்த நிலையில் அதிகாலை 4 மணிக்கு குழந்தைக்கு கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சின்னபாண்டியும், பானுப்பிரியாவும் பிரணித்தை சிகிச்சைக்காக வத்தலக்குண்டுவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவன், மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
அதன் பிறகு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பிரணித் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அபினேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சளி மருந்து குடித்து ஒன்றரை வயது குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.