சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து - மேலாளர் கைது

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து - மேலாளர் கைது
Published on

விருதுநகர்,

சிவகாசி அருகே நாரணாபுரம்-அனுப்பன்குளம் சாலையில் சீனிவாசன் மகன் கோபி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த ஆலையில் 50 அறைகள் உள்ளன. 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்றும் வழக்கம்போல் பட்டாசு உற்பத்தி நடந்தது. மாலை 3.30 மணி அளவில் ஆலையில் உள்ள ஒரு அறையில் உற்பத்தி செய்த பட்டாசுகளை எடுத்துச்சென்றபோது திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிவகாசி அருகே உள்ள பள்ளபட்டி முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்த தங்கராஜ் என்பவருடைய மகன் கார்த்திகை செல்வம் (வயது 25), சிவசாமி என்பவருடைய மனைவி சங்கீதா (43), குருசாமி என்பவருடைய மனைவி லட்சுமி (45) ஆகியோர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.

மேலும் அப்பகுதியை சேர்ந்த மாரியம்மாள் (50), நாகலட்சுமி (55) ஆகியோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கோர விபத்தில் 4 அறைகள் தரைமட்டமாகின. வெடி விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சிவகாசி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பட்டாசு ஆலையின் மேலாளர் பிரபாகரன், போர்மேன் செல்வகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள பட்டாசு ஆலை உரிமையாளர் சீனிவாசனை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com