ஆப்பிரிக்காவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் ரூ.4 கோடி போதை பவுடர் கடத்தல் - வாலிபர் கைது

சென்னை விமான நிலையத்தில் ஆப்பிரிக்காவில் இருந்து கடத்தி வந்த ரூ.4 கோடி மதிப்புள்ள போதை பவுடரை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக ஐவரி கோஸ்ட் நாட்டை சேர்ந்த வாலிபரை கைது செய்தனர்.
ஆப்பிரிக்காவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் ரூ.4 கோடி போதை பவுடர் கடத்தல் - வாலிபர் கைது
Published on

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஐவரி கோஸ்டில் இருந்து எத்தியோப்பியா வழியாக சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அதில் ஐவரி கோஸ்ட் நாட்டை சேர்ந்த இம்மானுவேல் (வயது 32) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். சுற்றுலா விசாவில் சென்னை வந்ததாக அவர் கூறினார். மேலும் அவரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதனால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

அப்போது அவரிடம் இருந்த கைப்பிடியுடன் கூடிய சூட்கேஸ் வழக்கத்துக்கு மாறாக சற்று அதிக எடையுடன் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அந்த சூட்கேசை பிரித்து சோதனை செய்தனர்.

அதில் சூட்கேசின் அடிப்பாகத்தில் ரகசிய அறை வைத்து அதில் விலை உயர்ந்த போதை பவுடர் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டு பிடித்தனர். ரூ.4 கோடி மதிப்புள்ள 1 கிலோ 999 கிராம் அம்பெட்டமின் என்ற போதை பவுடரை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதனை கடத்தி வந்த ஐவரி கோஸ்ட் நாட்டு வாலிபரை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அவர் யாருக்காக அதனை கடத்தி வந்தார்?. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலுக்கு இதில் தொடர்பு உள்ளதா? சென்னையில் உள்ள போதை கடத்தல் கும்பல் யார்? என விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com