

சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர்யுடனான தனது நினைவுகளை சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் சட்டசபையில் பகிர்ந்துகொண்டார்.
அவர் கூறியதாவது:-
"ஒரு சுவையான, மனதில் என்றும் நினைத்துக்கொண்டிருக்கும் ஒரு நிகழ்வு. இங்கு இப்போது சொன்னால் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். 1984-ம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 12-ம் தேதி எம்.ஜி.ஆருடன் காரில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். மேற்கு கே.கே.நகர் பக்கம் கார் சென்று கொண்டிருந்தபோது ஓரு இடத்தில் கூட்டம் அதிகம் இருந்தது. என்ன என்று கேட்டார். இது ரேஷன் கடை, வில்லிவாக்கம் தொகுதியின்கீழ் வருகிறது என்று சொன்னேன்.
உடனே காரை நிறுத்துங்கள் என்று எம்.ஜி.ஆர். சொன்னார்; காரை விட்டு இறங்கி ரேஷன் கடைக்குச் சென்றார். அங்கு ஒரு சாதாரண ஸ்டூல் இருந்தது. அதில் அவரே உட்கார்ந்து கொண்டார். அரிசியை காண்பிக்கச் சொன்னார். அரிசியை கையில் வைத்து ஆய்வு செய்தார். பின்னர் எடையை பின்பக்கமாக திரும்பி பார்த்தார்; எதற்கு பார்த்தார் என்பது குறித்து உங்கள் அனைவருக்கும் தெரியும். அங்கு வரிசையில் இருந்தவர்களிடம் அனைத்து பொருட்களும் கிடைக்கிறதா? எடை சரியாக இருக்கிறதா..? கடையை ஒழுங்காக திறக்கிறார்களா?' என்று கேட்டார். ஒழுங்காகத் திறக்கிறார்கள் என்று மக்கள் சொன்னார்கள்.
பின்னர் சிரித்துக்கொண்டே காரின் அருகில் வரும்போது என் கையை பிடித்து சொன்னார். 'இது ஒழுங்காக இருக்கும் வரைக்கும் நாம் திரும்ப திரும்ப ஆட்சிக்கு வருவோம்' என்று சொன்னார். நீங்கள் எல்லாம் இதுபற்றி பேசும்போது எனக்கு நினைவு பின்னோக்கி சென்றது" என்று கூறினார்.