கோடியக்காடு பகுதியில் கூட்டம் கூட்டமாக சாலையை கடக்கும் புள்ளிமான்கள்: வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

மான்கள் சாலையைக் கடக்கும் போது ஹாரன் ஒலிப்பதைத் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை.
சாலையை கடக்கும் புள்ளிமான்கள்
Published on

நாகப்பட்டினம்,

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்காடு மற்றும் கோடியக்கரை வனப்பகுதியில் இருந்து வெளியேறும் புள்ளிமான்கள், கூட்டம் கூட்டமாக சாலையைக் கடந்து வருவதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டுமென வனத்துறை எச்சரித்துள்ளது.

உணவு தேடி இடப்பெயர்ச்சி

கோடியக்கரை வனவிலங்கு சரணாலயப் பகுதியில் ஆயிரக்கணக்கான புள்ளிமான்கள், வெளிநாட்டுப் பறவைகள் மற்றும் பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது நிலவி வரும் பருவநிலை மாற்றம் மற்றும் காடுகளுக்குள் நிலவும் தண்ணீர், உணவுத் தட்டுப்பாடு காரணமாக, மான்கள் கூட்டம் கூட்டமாக விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளை நோக்கி வரத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, கோடியக்காடு முக்கியச் சாலைகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் நூற்றுக்கணக்கான புள்ளிமான்கள் கூட்டம் கூட்டமாக சாலையைக் கடந்து செல்கின்றன.

வனத்துறை அறிவுறுத்தல்கள்

கோடியக்காடு - கோடியக்கரை சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை குறைவான வேகத்தில் இயக்க வேண்டும். மான்கள் சாலையைக் கடக்கும் போது ஹாரன் ஒலிப்பதைத் முற்றிலும் தவிர்க்க வேண்டும். சத்தத்தைக் கேட்டு மான்கள் மிரண்டு ஓடி விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.

வனவிலங்குகள் விபத்தில் சிக்குவதைத் தடுக்க வனத்துறையினர் அப்பகுதியில் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் சாலையைக் கடக்கும் மான்களுக்கு எவ்வித இடையூறும் செய்யாமல், அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒத்துழைக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com