

சென்னை,
சென்னை மாநிலக்கல்லூரி மற்றும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை இணைந்து சமூக வாழ்வில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை நேற்று நடத்தியது. நிகழ்ச்சியில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நடைபெற்ற அறிமுகப்பயிற்சியில், சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படையின் தலைவர் ஐ.ஜி.கே.பவானீஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
மேலும், மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடியதுடன், மாணவிகளை நேரடியாக கை குலுக்கி வாழ்த்தும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் ராமன், இயற்பியல் துறை தலைவர் பேராசிரியர் விஜயலட்சுமி, பேராசிரியர் ரமேஷ் மற்றும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தலைமையக டி.எஸ்.பி. சங்கீதா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் ஐ.ஜி. பவானீஸ்வரி பேசும்போது, "சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 75-க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளன. 9 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. மாணவிகள் 1091, 100, 102 என்ற உதவி எண்கள் மற்றும் காவல் உதவி செயலியை பயன்படுத்த வேண்டும்" என்றார்.