இறுதி வடிவம் பெறும் தமிழக பட்ஜெட் - தேர்தல் வாக்குறுதிகள் இடம்பெறுமா...?

முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற துறை வாரியான ஆலோசனை கூட்டம் நிறைவடைந்துள்ளது.
இறுதி வடிவம் பெறும் தமிழக பட்ஜெட் - தேர்தல் வாக்குறுதிகள் இடம்பெறுமா...?
Published on

சென்னை,

தவெக அரசு மீது எதிர்பார்ப்பு

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று த.வெ.க. அரசு ஆட்சி பொறுப்பேற்றுள்ளது. 59 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து புதிதாக ஆட்சி அரியணை ஏறியுள்ள த.வெ.க. அரசு மீது பல்வேறு எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், 2026-2027-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் ஆகஸ்டு 5-ந் தேதி (புதன்கிழமை) சட்டசபையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இதுவென்பதால், பொதுமக்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தேர்தல் அறிக்கை

தேர்தலுக்கு முன்பு வெளியிடப்பட்ட த.வெ.க. தேர்தல் அறிக்கையில், "குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும். ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்.ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு ஒரு பவுன் தங்கம் மற்றும் உதவி வழங்கப்படும். விலையில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும். ரேஷன் பொருட்கள் வீடு தேடி விநியோகிக்கப்படும். வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.4 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்" என்பது உள்பட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.

துறை வாரியாக ஆலோசனை

இந்த நிலையில், முதல் பட்ஜெட்டை முத்தான பட்ஜெட்டாக தாக்கல் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில், கடந்த 20 நாட்களுக்கு மேலாக, துறை வாரியாக ஆலோசனை கூட்டங்களை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் நடத்தினார். ஒவ்வொரு துறை சார்பிலும் பட்ஜெட்டில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்பது குறித்து விவாதித்து முடிவெடுக்கப்பட்டது.

தற்போது, இந்த ஆலோசனை கூட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், 2026-2027-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இறுதி வடிவம் பெற்று வருகிறது. இந்தப் பணி முடிவடைந்ததும், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யிடம் ஒப்புதல் பெறப்படும்.

இறுதிக்கட்ட பணிகள் மும்முரம்

பட்ஜெட் தாக்கல் செய்ய இன்னும் 11 நாட்களே இடைவெளி இருப்பதால், இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றது. நிதித்துறை அதிகாரிகள் அந்தப் பணியில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளனர். தற்போதைய அரசுக்கு கடன் சுமை தான் பெரிய தலைவலியாக உள்ளது. ரூ.13 லட்சம் கோடிக்கு மேல் கடன் இருக்கும் சூழ்நிலையில், கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியிலேயே பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பட்ஜெட் எப்படி இருக்கும்?

கடந்த ஆண்டு (2025-26) தி.மு.க. ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், அரசின் மொத்த செலவினம் ரூ.4,39,293 கோடியாகவும், வருவாய் வரவுகள் ரூ.3,31,569 கோடியாகவும் இருந்தது. அதாவது, நிதி பற்றாக்குறை ரூ.1,06,968 கோடி என்ற அளவில் இருந்தது.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ந் தேதி தாக்கல் செய்யப்பட்ட 2026-27-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில், மொத்த செலவினம் ரூ. 4,67,264 கோடியாகவும், வருவாய் வரவுகள் ரூ.3,44,575 கோடியாகவும் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு இருந்தது. நிதி பற்றாக்குறை ரூ.1.21 லட்சம் கோடியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

எனவே, இந்த கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியில் த.வெ.க. அரசு எப்படி சிறப்பான பட்ஜெட்டை தாக்கல் செய்யப்போகிறது என்று ஆண்ட கட்சிகள் மட்டுமல்லாது, நாட்டு மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com