அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கார் வாங்க உச்சவரம்பு தொகை நிர்ணயம் - தமிழக அரசு உத்தரவு

அமைச்சர்களுக்கான போக்குவரத்து செலவுகளை பொதுத்துறை மூலமாக அரசு ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு
கோப்புப்படம்
Published on: 

சென்னை,

சபாநாயகர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கான கார் வாங்குவதற்கான உச்சவரம்பு தொகையை நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

விதிகளில் திருத்தம்

இதுகுறித்து பொதுத்துறை செயலாளர் சுந்தரவல்லி வெளியிட்ட உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு சம்பளம் வழங்கும் சட்டத்தின் கீழ், தமிழ்நாடு சட்டமன்ற பயணப்படி விதிகளில் திருத்தம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, பயணப்படி விதிகளில் 'வாகன வசதி' என்ற வார்த்தை புதிதாக சேர்க்கப்பட்டு, அது மோட்டார் காரை குறிக்கும் என வரையறுக்கப்படுகிறது.

அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அரசு தலைமை கொறடா ஆகியோருக்கு கார் வாங்குவதற்கான உச்சவரம்பு ரூ.26 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் இந்த உச்சவரம்பு ரூ.15 லட்சமாக இருக்கும். அதில் காரின் விலை, வரிகள், பதிவு கட்டணம் மற்றும் வாகன காப்பீடு ஆகியவை அடங்கும். இந்த உச்சவரம்பு ஆண்டுதோறும் 5 சதவீதம் அதிகரிக்கப்படும்.

யார் செலவு?

அமைச்சர்களுக்கான கார்களை அரசு தனது பெயரிலும், மற்றவர்களுக்கான கார்கள், சட்டமன்ற செயலகத்தின் செயலாளர் பெயரிலும் கொள்முதல் செய்யப்படும். அனைத்து கார்களும் பிஎஸ்-6 தரநிலைகளுக்கு உட்பட்டதாகவும், அரசு ஜெம் இணையதளம் மூலமாகவும் வாங்கப்பட வேண்டும்.

அமைச்சர்களுக்கான போக்குவரத்து செலவுகளை பொதுத்துறை மூலமாக அரசே ஏற்கும். சபாநாயகர், துணை சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், அரசு தலைமை கொறடா ஆகியோருக்கான செலவுகளை சட்டமன்ற செயலகம் ஏற்கும். மற்ற உறுப்பினர்களுக்கான செலவுகள், மாவட்ட கலெக்டர் மூலமாக வழங்கப்படும்.

பராமரிப்பு செலவு

அந்த வகையில், கார்களின் பராமரிப்பு, பழுதுபார்ப்பு, எரிபொருள் மற்றும் ஓட்டுனர் செலவுகளை பொதுத்துறையும், சபாநாயகர், துணை சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், அரசு தலைமை கொறடா ஆகியோருக்கான செலவுகளை சட்டமன்ற செயலகமும், எம்.எல்.ஏ.க்களுக்கான செலவுகளை அவர்களுக்கான வாகனப்படி மூலமாகவும் மேற்கொள்ளப்படும்.

ஒப்படைப்பு

பதவிக்காலம் முடிவடைதல், மரணம், பதவி நீக்கம், ராஜினாமா அல்லது தகுதி நீக்கம் ஆகிய நேரங்களில் அமைச்சர்கள் பொதுத்துறையிடமும், சபாநாயகர் உள்ளிட்டோர் சட்டமன்ற செயலக செயலாளரிடமும், மற்ற உறுப்பினர்கள் மாவட்ட கலெக்டர்களிடமும் கார்களை ஒப்படைக்க வேண்டும். தேவைப்படும் நேர்வுகளில் இந்த விதிகளில் தளர்வு அளிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com