காவிரியில் நீர் பெற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர தமிழகம் முடிவு: அன்புமணி வரவேற்பு!

மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க தடைவிதிக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
காவிரியில் நீர் பெற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர தமிழகம் முடிவு: அன்புமணி வரவேற்பு!
Published on

சென்னை,

காவிரியில் நீர் பெற உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழகம் முடிவு தாமதமாக எடுக்கப்பட்டாலும் சரியான நடவடிக்கை! என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

காவிரியில் தமிழ்நாட்டுக்கான தண்ணீரைப் பெறுவதற்காக சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடரப்போவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு எதிராக நடைபெறவிருந்த இரு தரப்பு பேச்சுகள்ளுக்கான கதவுகளை கர்நாடக அரசு மூடியதற்கு பிறகு மிகவும் தாமதமாகத் தான் இந்த முடிவை தமிழக அரசு எடுத்திருக்கிறது என்றாலும், காவிரி சிக்கலில் இது தான் சரியான நடவடிக்கையாகும்.

காவிரி நீர்ப் பகிர்வு, மேகதாது அணை சிக்கல் ஆகியவை குறித்து கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரை தமிழக முதல்-அமைச்சர் விஜய் நாளை மறுநாள் பெங்களூரில் சந்தித்து பேசுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், கர்நாடகத்திலும் வெடித்துள்ள போராட்டங்களைக் காரணம் காட்டி, இரு தரப்பு பேச்சுகளுக்கு உகந்த சூழல் நிலவவில்லை என்று கர்நாடக முதல்-மந்திரி நேற்று அறிவித்ததைத் தொடர்ந்து அங்கு செல்லும் திட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் கைவிட்டிருப்பதாக அரசு அறிவித்துள்ளது. அதற்கு மாறாக, காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீரை உடனடியாக திறந்து விடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடரப் போவதாக சட்ட அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்திருக்கிறார். ஆகஸ்ட் ஐந்தாம் தேதிக்குப் பிறகு இந்த வழக்கு தொடரப்படும் என்று தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சட்டப்படி எதிர்கொள்வது சரி

தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு மறுக்கும் சிக்கலாக இருந்தாலும், மேகதாது அணையை கட்ட கர்நாடகம் சதி செய்யும் சிக்கலாக இருந்தாலும் அதை சட்டப்படியாக எதிர்கொள்வது தான் சரியானதாக இருக்கும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால், அதற்கு மாறாக இந்த விவகாரத்தில் தவறான பாதையில் பயணித்த தமிழக அரசு, இப்போதாவது சரியான பாதைக்கு திரும்பி இருப்பது மனநிறைவு அளிக்கிறது. இனிவரும் காலத்திலும் கூட காவிரி நீர்ப்பகிர்வு, மேகதாது விவகாரம் ஆகியவற்றில் கர்நாடக அரசுடன் எந்த வகையிலும் பேசுவதில்லை என்ற கொள்கை முடிவை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய் அரசியலுக்கு புதிது என்பதால், புதுமையாக எதையாவது செய்து தமிழகத்திற்கு தண்ணீரை பெற வேண்டும் என்று நினைத்திருக்கலாம். ஆனால், கர்நாடகத்தில் எந்தக் கட்சியின் ஆட்சி நடந்தாலும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க அம்மாநில முதல்-மந்திரிகள் முன்வர மாட்டார்கள் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு 205 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும். 1995-ஆம் ஆண்டில் கடுமையான வறட்சி நிலவிய சூழலில் சுப்ரீம் கோர்ட்டே ஆணையிட்ட பிறகும் கூட தமிழகத்திற்கு கர்நாடகம் தண்ணீர் வழங்கவில்லை. அதன்பின் இந்த விஷயத்தில் பிரதமர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு ஆணையிட்ட பிறகு, அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் இது தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, கர்நாடக முதல்-மந்திரி தேவகவுடா ஆகியோரை அழைத்து பேச்சு நடத்தினார். அதன்பயனாக நடுவர் மன்றம் ஆணையிட்ட 11 டி.எம்.சிக்கு பதிலாக 6 டிஎம்சி நீரை மட்டும் கர்நாடகம் திறந்து விட்டது.

கோர்ட்டு அவமதிப்பு

அதன்பின், 2002-ஆம் ஆண்டில் காவிரி பாசன மாவட்டங்களில் உழவர்கள் எலிக்கறி சாப்பிடும் அளவுக்கு கடுமையான வறட்சி நிலவியது. அப்போது சம்பா பயிர்களைக் காப்பாற்றுவதற்காக தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடகத்திற்கு பிரதமர் தலைமையிலான காவிரி நீர் ஆணையம் ஆணையிட்டது. ஆனால், கர்நாடகம் தண்ணீர் திறக்க மறுத்து விட்ட நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தமிழகத்திற்கு தினமும் 0.8 டி.எம்.சி தண்ணீர் திறக்க ஆணையிட்டது. ஆனால், அதையும் மதிக்காத கர்நாடக காங்கிரஸ் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா தண்ணீர் திறக்க முடியாது என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தமிழகம் தொடர்ந்தது.

அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடாவிட்டால், கடுமையான விளைவுகள் ஏற்படும்; கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் சிறை தண்டனை வழங்கவும் தயங்க மாட்டோம் என்று 26.10.2002-ஆம் நாள் ஆணையிட்டது. அதைத் தொடர்ந்து தான் கர்நாடகம் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட்டது. அதன்பிறகும் எஸ்.எம். கிருஷ்ணா மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்காமல் நிலுவையில் வைத்துக் கொண்டே நவம்பர் 15-ஆம் தேதி வரை தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க சுப்ரீம் கோர்ட்டு ஆணையிட்டது. மிதவாதிகள் என்று அறியப்பட்ட எஸ்.எம்.கிருஷ்ணாவும், எச்.டி.தேவகவுடாவுமே சுப்ரீம் கோர்ட்டு ஆணையிட்ட பிறகும் கூட தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முன்வராத நிலையில், காவிரி சிக்கலை தீவிரமாக்கியே அடுத்த தேர்தலிலும் முதல்-மந்திரியாக பதவியைத் தக்க வைத்துக் கொள்ளத் துடிக்கும் டி.கே.சிவக்குமார் கேட்டவுடன் காவிரியில் தண்ணீர் திறந்து விடுவார் என்று எதிர்பார்ப்பது அரசியல் அறியாமையாகவே இருக்கும். இந்த அணுகுமுறையை அரசு கைவிட வேண்டும்.

தடைவிதிக்க வேண்டும்

காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆணைப்படி தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட ஆணையிடும்படி சுப்ரீம் கோர்ட்டில் விரைந்து வழக்கு தொடர்ந்து நீரைப் பெற வேண்டும். அதுமட்டுமின்றி, மேகதாது அணை விவகாரத்திலும் மத்திய அரசும், கர்நாடக அரசும் செய்யும் கூட்டுச் சதியை உரிய தரவுகளுடன் சுப்ரீம் கோர்ட்டின் கவனத்திற்கு கொண்டு சென்று மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க தடைவிதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com