கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை


கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை
x

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் தனியார் மருத்துவமனைகள் மாவட்ட இணை பொது சுகாதாரத்துறை அலுவலகத்தில் தெரியப்படுத்த வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை

கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று கடந்த 2019-ம் ஆண்டு உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தியது. இந்த வைரஸ் பாதிப்பால் பல லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். மேலும் பல கோடி பேர் அந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தனர்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் இந்தியா உள்பட பல நாடுகளில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவில் கர்நாடகம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா, தெலுங்கானா உள்பட பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 3,395 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் நேற்று ஒரே நாளில் மட்டும் 685 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் கேரளாவில் 1,336 பேரும், மகாராஷ்டிராவில் 467 பேரும், டெல்லியில் 375 பேரும், குஜராத்தில் 265 பேரும், கர்நாடகாவில் பேரும் 234, மேற்கு வங்காளத்தில் 205 பேரும், தமிழ்நாட்டில் 185 பேரும், மற்றும் உத்தரபிரதேசத்தில் 117 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லி, கேரளா, கர்நாடகா மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை எதிர்கொள்ள அனைத்து மாநிலங்களும் தயார் நிலையில் இருக்க மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன், மருந்துகள் கையிருப்பு இருப்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா சிகிச்சைக்கு தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் கூடுதல் கட்டணம் அல்லது சிறப்பு கட்டணம் வசூலிப்பதாக தற்போது புகார்கள் எழுந்துள்ளன.

இதனையடுத்து தமிழக பொது சுகாதாரத்துறை, "கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் தனியார் மருத்துவமனைகள் மாவட்ட இணை பொது சுகாதாரத்துறை அலுவலகத்தில் தெரியப்படுத்த வேண்டும். சிறப்பு கட்டணமோ அல்லது கூடுதல் கட்டணமோ வசூலிக்கக் கூடாது. வீரியம் இல்லாத கொரோனாவிற்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தனியார் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

1 More update

Next Story